(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டை அழித்த ராஜபக்ஷ குழுக்களுடனும், அந்த அரசாங்கத்துக்கு துணை போகக்கூடியவர்களுடனும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணைந்து கொள்ளப்போவதில்லை. மாறாக, மக்களின் ஆணையுடன் நாட்டின் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வோம். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டதும் கடந்த காலங்களில் மோசடியான செயற்பாடுகளினால் நாடு இழந்த சொத்துக்கள், வளங்கள் மற்றும் நிதிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் செல்வந்தர்களுக்கு 600 - 700 பில்லியன் ரூபாய் வரையில் வரிச் சலுகைகளை வழங்கி, அரச வருமானத்தை 12 வீதத்தில் இருந்து 8 வீதம் வரையில் குறைத்து, நாட்டை இவ்வாறான நெருக்கடி நிலைக்கு செல்வதற்கான ஆரம்பத்தை முன்னெடுத்தது.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்ல வேண்டும் என்பதனை நாங்களே முதலில் கூறினோம். நிதி நெருக்கடிக்கு முன்னரே நாணய நிதியத்துக்கு சென்றிருந்தால் இவ்வாறான வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது. தற்போதைய நிலைமையில், 2019ஆம் ஆண்டில் இருந்த நிலைமைக்கு செல்ல வேண்டுமாயின், 2028ஆம் ஆண்டு வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும், இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிய விடயங்களில் எமக்கு பாரிய பிரச்சினைகள் உள்ளன. வருமானத்தை அதிகரிக்க வரிச் சூத்திரமொன்றை கொண்டு வந்தது. அதில் குறைபாடுகள் உள்ளன. அது தவறானது. அதனை உடனடியாக திருத்த வேண்டும்.
மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்கும் இந்த அரசாங்கம் பென்டோரா பத்திரிகை தகவல்கள் ஊடாக வெளியான இந்நாட்டில் இருந்து மோசடியாக சென்ற பணத்தை எவ்வாறு மீளப் பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் எந்த விடயங்களையும் குறிப்பிடவில்லை.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நாட்டுக்கு இல்லாமற்போன, கொள்ளையடித்த டொலர் மற்றும் நிதியை மீளப் பெற்றுக் கொள்வதற்காக அது தொடர்பான சட்டமூலத்தை கொண்டுவந்து அதிகார சபையொன்றை அமைத்து, இல்லாமற்போன வளங்கள், டொலர் மற்றும் ரூபாயையும் மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்.
அரச நிறுவனங்களுக்கு தனியாக இலாபமீட்ட முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. இதனால் நாங்கள் கலப்பு முறைக்கு செல்ல முடியும். சிங்கப்பூர், மலேசியா போன்ற முறைகளில் செய்ய முடியும். இதனால் புதிய முறையில் செல்வோம். ஆனால், தனியார் மயப்படுத்தல் போர்வையில் இலாபமடையும் அரச நிறுவனங்களை தமது நண்பர்களுக்கு விற்பனை செய்யும் திட்டங்களை தோற்கடிக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
அத்துடன், அமைச்சுப் பதவிகளை கொடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை அரசாங்கத்தின் பக்கம் இழுப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இருந்து எவரும் அவ்வாறு செல்லப் போவதில்லை. அதேவேளை, அரசாங்கத்தில் உள்ள குழுவொன்றே எங்களின் பக்கத்துக்கு வரவுள்ளனர் என்ற எதிர்வுகூறலையும் கூறுகின்றேன்.
மேலும், நான் பொறுப்புகளை ஏற்க பின்வாங்கியதாக கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு பொறுப்பேற்றால், யாருடன் வேலை செய்யப் போகின்றேன் என்பது பற்றி சிந்தித்தேன்.
நாட்டை சீரழித்த, கொள்ளையடித்த, குடும்ப ஆட்சிக்காக ராஜபக்ஷவினருடன் மண்டியிட்டவர்களுடன் அதனை செய்ய முடியாது என்பதே அதற்கு காரணமாகும். பொறுப்புகளை ஏற்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை நாங்கள் மக்கள் ஆணையுடனேயே ஏற்போம்.
அதேநேரம் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள், பெண்டொரா பத்திரிகை மூலம் வெளியான தகவல்களுடன் தொடர்புடையவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, நாடு இழந்த சொத்துக்கள் மற்றும் நிதியை மீளப் பெற்றுக்கொள்ள எமது ஆட்சியில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment