(எம்.ஆர்.எம்.வசீம்)
உண்மையை கண்டறிய நியமிக்கப்பட இருக்கும் ஆணைக்குழு மூலம் 1983 ஜூலை மாதத்தில் இருந்து இந்த நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை தேடிப்பார்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அத்துடன் சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிராக நிலைபேரான வழியில் பயனிக்க இலங்கையால் முடியுமா? மும்மொழியப்பட்டுள்ள சட்டமூலம் இதற்கு உறுதுணையாக அமையுமா எனும் தலைப்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் இலங்கை மன்ற கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்திருந்த மக்கள் மன்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றம், நீதிமன்றம் மற்றும் நிறைவேற்றுத்துறை என இவை அனைத்தும் ஒன்றிணைந்து ஊழலை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும் சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்க முடியாது.
அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் அதேபோன்று புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாட்டின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் புதிய சட்டமாக அறிமுகப்படுத்தலாம்.
அத்துடன் புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் ஊடாக தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் சட்டமா அதிபரின் ஆலாலோனையை பெற்றுக் கொள்ள முடியுமாகிறது.
சட்ட ஆலாலோனை மற்றும் சட்ட உதவி பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கி இருக்கிறது.
தற்போது செயற்படும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆணையாளர்களாக நியமிக்கப்படுவது ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளாகும்.
அந்த முறையை மாற்றி செயற்திறமையுடன் பொறுபுக்கூறக் கூடிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சபை ஒன்றை அமைக்கும் நோக்கில் தகுதி வாய்ந்த சேவையில் இருக்கும் அரச அதிகாரிகள் மற்றும் சிவில் பிரதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சுயாதீனம் என தெரிவிப்பதன் மூலம் மாத்திரம் தேவையற்ற சுதந்திரத்தை ஆணைக்குழுக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது. புதிய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளது. இந்த நாட்டுக்குள் சட்டம் அமைப்பது இலகுவான விடயமல்ல.
தற்போது இருக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அமைக்கப்பட்டு முதல் 5 வருடங்களுக்குள் ஒரே ஒரு வழக்கு மாத்திரம் தொடுக்கப்பட்டிருந்ததன் மூலம் இந்த ஆணைக்குழுவின் பலவீனம் தெளிவாகின்றது.
மேலும் உண்மையை கண்டறிய நியமிக்கப்பட இருக்கும் ஆணைக்குழு மூலம் 1983 ஜூலை மாதத்தில் இருந்து இந்த நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை தேடிப்பார்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அதற்கு தேவையான அமைச்சரவைப் பத்திரம் நீதி அமைச்சர் என்ற வகையில் நானும், வெளிவிவகார அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்தோம். அதற்கான அனுமதி கிடைத்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment