பொருளாதார பாதிப்புக்கு நிலையான தீர்வு காண இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் : தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அரச நிறுவனங்கள் ஊடாக முன்னெடுப்பு - கஜேந்திரகுமார் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 27, 2023

பொருளாதார பாதிப்புக்கு நிலையான தீர்வு காண இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் : தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அரச நிறுவனங்கள் ஊடாக முன்னெடுப்பு - கஜேந்திரகுமார்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாடு என்ற ரீதியில் பொருளாதார பாதிப்புக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாயின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் மாத்திரம் முன்னேற்றமடைய முடியாது, ஆகவே கட்சி என்ற ரீதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நாடு என்ற ரீதியில் பாரிய பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறோம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தில் நாணய நிதியத்தை வரவேற்கிறார்கள்.

கடந்த செப்டெம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்ட ஊழியர் மட்ட ஒப்பந்த அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து, அது தொடர்பில் விவாதத்தை நடத்துமாறு பலமுறை வலியுறுத்தினோம்.

ஊழியர் மட்ட ஒப்பந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நிதி தொகையை பெற்றுக் கொண்டவுடன் ஒப்பந்தம் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்படுகிறது.

நாணய நிதிய விவகாரத்தில் பாராளுமன்றம் ஒருமித்து செயற்படுகிறது என்பதை பிரதான நிலை கடன் வழங்குநர்களுக்கு காண்பிப்பதற்கு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது என்பதை ஊகிக்க முடிகிறது.

தற்போதைய பொருளாதார பாதிப்பு குறுகிய காலத்தை மாத்திரம் வரையறுத்ததல்ல, நாட்டில் இனப் பிரச்சினை தோற்றம் பெற்றதை தொடர்ந்து பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது. தமிழ் மக்களை அழிப்பதற்காக மொத்த தேசிய வருமானமும், வெளிநாட்டு அரச முறை கடன்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டன. யுத்த சூழல் தமிழர்களை மாத்திரமல்ல பொருளாதாரத்தையும் அழித்தது, அதற்கு சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் தலைமைத்துவம் வழங்கியது.

பொருளாதார பாதிப்புக்கு சர்வதேச நாணய நிதியம் என்பது குறுகிய கால ஒரு தீர்வாகும், அது நிலை பேறான தன்மையை உருவாக்காது. இலங்கை புதிய பரிமாணத்தை நோக்கி பயணிக்க வேண்டுமாயின் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட சூழலில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வ கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பெறுபேறு எவ்வாறு அமையும் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை குறுகிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் குறிப்பிட்டார். அது வெறும் வழமையான வாக்குறுதியாக அமைந்தது.

30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் அரச நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழர்களுக்கு எதிராகவே செயற்படுகின்றன. தமிழரின் புராதன சின்னங்கள் மற்றும் உரிமைகள் அழிக்கப்படுகின்றன. அதற்கு நீதிமன்றம் தடை விதிக்கும்போது அதனை ஒரு தரப்பினர் மதிக்காமல் தன்னிச்சையாக செயற்படுகிறார்கள். அதற்கு பொலிஸாரும் ஆதரவாக செயற்படுகிறார்கள். தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

நாடு என்ற ரீதியில் பொருளாதார பாதிப்புக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாயின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அதனை தவிர்த்து சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் மாத்திரம் முன்னேற்றமடைய முடியாது, ஆகவே கட்சி என்ற ரீதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றார்.

No comments:

Post a Comment