மீண்டும் கூடி ஆராயவுள்ள தேர்தல் ஆணைக்குழு ! நாளை முக்கிய தீர்மானம் ! - News View

About Us

About Us

Breaking

Monday, April 3, 2023

மீண்டும் கூடி ஆராயவுள்ள தேர்தல் ஆணைக்குழு ! நாளை முக்கிய தீர்மானம் !

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அடுத்த கட்ட தீர்மானங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (4) மீண்டும் கூடி ஆராயவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தலைமையில் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம்மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

எனினும் நிதி நெருக்கடியால் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாமையினால் குறித்த தினத்தில் திட்டமிட்டவாறு தேர்தலை நடத்துவது கடினம் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

அது மாத்திரமின்றி ஆரம்பத்திலேயே தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்காது, தேர்தலை நடத்துவதற்கான வசதிகள் மற்றும் சூழல் தொடர்பில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இறுதியாக தினத்தை அறிவிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் 23ஆம் திகதி ஆணைக்குழு அறிவித்தது.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் கேள்வி எழுப்பப்பட்டபோது விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து பேசவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறிருப்பினும் இதுவரையில் அவ்வாறு எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.

எனினும் இவ்வாரம் பிரதமருடன் சந்திப்பு இடம்பெறக் கூடும் எனத் தெரிவித்துள்ள ஆணைக்குழு, உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையிலேயே செவ்வாய்க்கிழமை (4) தேர்தல் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment