(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனித்து அல்லது கூட்டணியாக போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி அவதானம் செலுத்தியுள்ளது.
இரு பிரதான அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்கினால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பெரும்பாலான அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு கடந்த வாரம் கொழும்பில் இடம் பெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைய தீர்மானித்துள்ளனர். இருப்பினும் அவர்களில் ஒருசிலருக்கு மாத்திரமே அமைச்சுப் பதவிகள் வழங்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை ஸ்தீரப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் குறித்து விசேடமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை பொதுஜன பெரமுன மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது குறித்து விரிவாக ஆராயுமாறு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட இரு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மக்க்ள மத்தியில் கருத்து கணிப்புக்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் மற்றும் ஜனநாயகம் ஆகிய இரண்டும் பாரிய சவால்களை எதிர்கொண்ட பின்னணியில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பொறுப்பேற்றார்.
குறுகிய காலத்திற்குள் நாடு வழமைக்கு திரும்பியுள்ளது, நாட்டு மக்கள் தற்போது யதார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பொது வேட்பாளராக அறிவித்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பெரும்பாலான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளாதாக அறிய முடிகிறது.
No comments:
Post a Comment