அடிப்படை உரிமைகளுக்கெதிரான விடயங்கள் காணப்படுமாயின் திருத்தியமைப்போம் : மாகாண சபை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும் - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 3, 2023

அடிப்படை உரிமைகளுக்கெதிரான விடயங்கள் காணப்படுமாயின் திருத்தியமைப்போம் : மாகாண சபை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும் - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச் சட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான விடயங்கள் ஏதும் காணப்படுமாயின் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக திருத்தியமைப்போம். ஊழல் ஒழிப்பு சட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இடம்பெறும்.

ஜனாதிபதித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவை ஏதும் தற்போது கிடையாது. அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம். எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் வெற்றிகரமாக அதனை எதிர்கொள்வோம். பெரும்பாலான மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள்.

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் இம்மாத காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இந்த சட்டமூலத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்தப்படும்.

ராஜபக்ஷர்களை திருடர்கள் என விமர்சித்து ஒரு தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொண்டார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.

ஊழல் ஒழிப்பு தொடர்பில் எவ்வித சட்டங்களும் இயற்றப்படவில்லை. தற்போது பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்படவுள்ளதையிட்டு பெருமையடைகிறோம். ஆகவே ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குவோம்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச் சட்டமூலம் தொடர்பில் தற்போது பல்வேறு மாறுப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான அம்சங்கள் ஏதும் குறித்த வரைபில் காணப்படுமாயின் அதனை பாராளுமன்றத்தின் ஊடாக திருத்தியமைப்போம் என்றார்.

No comments:

Post a Comment