(எம்.மனோசித்ரா)
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் எந்தவொரு இடத்திலும் நாட்டுக்கு பாதமான ஏற்பாடுகள் இல்லை. எனவே இதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய தேசிய பொறுப்புக்களிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் வியாழக்கிழமை (27)இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் எந்தவொரு இடத்திலும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. எனவே இவ்விடயத்தில் அனைவரும் சாதகமாக சிந்தித்து செயற்பட வேண்டும். மாறாக இந்த தேசிய பொறுப்பிலிருந்த தப்பியோட முயற்சிக்கக் கூடாது.
இந்த ஒப்பந்தத்தில் முன்மொழியப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலம், ஊழல் ஒழிப்பு சட்டமூலம் என்பன மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து இதனை ஆதரிக்க வேண்டும். அதற்கமைய 2048ஆம் ஆண்டு வரை நிலைமாறா தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் எந்த விடயமும் குறிப்பிடப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இந்த சட்டமூலம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
உலகின் பல நாடுகளிலும் இதுபோன்ற சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. 75 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அந்நியர்களின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்தவொரு நாடாகும். அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் ஏற்படாமலிருப்பதை தடுப்பதற்கு இவ்வாறான சட்ட மூலங்கள் அத்தியாவசியமானதாகும் என்றார்.
No comments:
Post a Comment