(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சுனாமியில் கொள்ளையடித்த ராஜபக்ஷர்கள் எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றிருக்கமாட்டார்கள் என்று கருத முடியாது. வழக்குத் தாக்கல் தாமதப்படுத்தப்படுவதன் பின்னணியில் ராஜபக்ஷர்கள் இருப்பார்கள் என்ற சந்தேகம் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள பின்னணியில்தான் இம்முறை சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்த அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து, எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்று, கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தும்போது மக்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்பலைகள் தோற்றம் பெறும். பாவத்தில் எதிர்க்கட்சிகளை பங்குதாரர்கள் ஆக்குவதற்காகவே அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை கோருகிறது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு என்பது நிவாரணம் அல்ல, பாரியதொரு கடன் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதற்கான பாதையை உருவாக்கியவர்கள் யார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண குறுகிய மற்றும் நீண்ட கால திட்டம் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது.
கடன் பெறல், வரி அதிகரித்தல், மக்கள் சேவை மீதான கட்டணத்தை அதிகரித்தல் ஆகியவற்றை தவிர்த்து மாற்றுத்திட்டம் ஏதும் அரசாங்கத்திடம் கிடையாது. நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. அரச நிறுவனங்களை யார் நட்டமாக்கியது? நாட்டு மக்கள் அல்ல, ஆட்சியாளர்களே. அரச நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் சகாக்களுக்கே கையளிக்கப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அழகாக உரையாற்றுகிறார். மக்களை ஏமாற்றும் வகையில் கருத்துரைக்காமல் உண்மையை மக்களுக்கு குறிப்பிட வேண்டும்.
2048ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். 2048ஆம் ஆண்டு அவரும் உயிருடன் இருக்கமாட்டார், நானும் உயிருடன் இருக்கமாட்டேன். ஆகவே, பொய்யை முன்னிலைப்படுத்தி ஆட்சி செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
முறையற்ற அரசியல் கலாசாரத்துக்கு எதிராகவே காலி முகத்திடல் போராட்டம் தோற்றம் பெற்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி தீர்வு கண்டுவிட்டதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள். பொருட்களின் விலை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2000 ரூபாயாக காணப்பட்ட மின் கட்டணம் 6000 ரூபாயாக காணப்படுகிறது. நடுத்தர மக்கள் தமது அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடுகிறார்கள். சமூக கட்டமைப்பு ஏழ்மையில் உள்ள பின்னணியில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் மக்கள் செல்வந்த நிலையில் வாழ்கிறார்கள் என்ற நினைப்பில் இருந்துகொண்டு கருத்துரைக்கிறார்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. சாரா எனப்படும் புலஸ்தினி உயிருடன் உள்ளாரா, இல்லையா என்பது இழுபறி நிலையில் உள்ளது.
குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நபர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின்போது சிங்கப்பூர் நாட்டுக்கு ஓடி ஒளிந்தார். இப்போது நியாயத்தை பற்றி கருத்துரைக்கிறார்.
எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களை கொன்று இலஞ்சம் பெறும் நிலைக்கு மனிதகுலம் தள்ளப்பட்டுள்ளது.
சுனாமி ஊடாக கொள்ளையடித்த ராஜபக்ஷர்கள் இந்த கப்பல் ஊடாக இலஞ்சம் பெற்றிருக்கமாட்டார்கள் என்று கருத முடியாது. வழக்குத் தாக்கல் ராஜபக்ஷர்களினால் தாமதப்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் காணப்படுகிறது.
நாட்டில் சட்டம், ஒழுங்கு இல்லை என்பது பல விடயங்களில் தெளிவாகிறது. மக்கள் போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும்.
எம் கால்களை நக்கிய நபர் தற்போது மே 9 சம்பவம் தொடர்பில் புத்தகம் வெளியிட்டு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கருத்துக்களை குறிப்பிடுகிறார். இவ்வாறானவர்களிடத்தில் மீண்டும் ஏமாறக்கூடாது என்பதை நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment