புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் - நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Saturday, April 1, 2023

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் - நளின் பண்டார

(எம்.மனோசித்ரா)

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை அவசரமான நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஏன் முயற்சிக்கிறது? பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அதனை உதாசீனப்படுத்திய அரசாங்கம் தற்போது ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்காக இந்த சட்டத்தை பயன்படுத்த முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை அவசரமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. இதனை தயாரித்துள்ளமையின் நோக்கம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராகவா, தேசிய பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டா அல்லது அரசாங்கத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முடக்குவதற்காகவே இதனை அறிமுகப்படுத்தியுள்ளனர். நியாயமான தொழிற்சங்க நடவடிக்கைகளைப் போன்று நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் இவற்றை சட்டமொன்றின் ஊடாக முடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

உண்மையில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அரசாங்கம் அதனை உதாசீனப்படுத்தியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை இன்னும் இனங்காண முடியாமலுள்ளது. இது தொடர்பில் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளோம். தற்போது சாரா ஜெஸ்மினும் உயிரிழந்து விட்டதாகக் கூறுகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு விவகாரத்தில் உண்மைகளை மறைப்பதற்கு முற்படாமல், பிரதான சூத்திரதாரிகளை இனங்கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment