இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் 2012 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற நிர்வாக மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் 30 க்கும் அதிகமான ஊழல் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதில் கால்பந்தை மேம்படுத்துவதற்கு கிடைக்கப் பெற்ற நிதியில் வெறும் இரண்டு வீதமே விளையாட்டுக்கும், வீரர்களுக்கும் செலவிடப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்தன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலேசிய சுற்றுப்பயணத்தில் மாத்திரம் சுமார் 100 மில்லியன் ரூபாய் வரை விரயமாக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இலங்கை கால்பந்து நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
‘முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் மற்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்பதோடு எதிர்காலத்தில் அவர்கள் கால்பந்து நிர்வாகத்தில் பதவிகளை வகிப்பதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று விளையாட்டு அமைச்சு கேட்போர் கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
இதன்போது ஒரு மாத காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்ட 249 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
முழுமையான அறிக்கையை தாம் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர், இது ஜனாதிபதி பிரதமர் மற்றும் பாராளுமன்றத்திற்கு விரைவில் கையளிக்கப்படும் என்றார்.
முந்தைய கால்பந்து நிர்வாகம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை தவறாக வழிநடத்தி இலங்கை கால்பந்து சம்மேளனம் மீதான சர்வதேச தடைக்கு வழிவகுத்ததாகவும் அமைச்சர் ரணசிங்க குற்றம்சாட்டினார்.
இந்த அறிக்கையை சர்வதேச கால்பந்து சம்மேளத்திற்கு சமர்ப்பித்து இலங்கை கால்பந்து நிர்வாகத்தின் உண்மையான நிலையை தெரியப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment