(நா.தனுஜா)
சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பொறுத்தமட்டில் இவ்வாண்டின் முதற்காலாண்டில் நேர்மறையான மாற்றம் தென்பட்டதையடுத்து, 2023 இல் நாட்டுக்கு 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
'நாட்டுக்குக் கடந்த ஆண்டு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இவ்வாண்டு 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது. இருப்பினும் இவ்வாண்டின் முதற்காலாண்டில் வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், 1.5 மில்லியன் எதிர்பார்க்கையை 2 மில்லியனாக உயர்த்தியிருக்கின்றோம்' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வருடம் மார்ச் மாதம் 90,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்று தாம் எதிர்பார்த்தபோதிலும், வருகை தந்தோரின் எண்ணிக்கை அதனைக் கடந்திருப்பதாகத் தெரிவித்துள்ள பிரியந்த பெர்னாண்டோ, மார்ச் மாதம் 1 - 28 ஆம் திகதி வரை 112,991 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி கடந்த 2019 ஆம் ஆண்டின் பின்னர் தொடர்ந்து 3 ஆவது மாதத்திலும் 100,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது இதுவே முதன்முறையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வருடம் மார்ச் மாதத்தைப் பொறுத்தமட்டில் நாளாந்தம் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4000 ஆகப் பதிவாகியுள்ளது.
அதன்படி இவ்வாண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் (ஜனவரி - மார்ச்) நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 323,185 ஆக அமைந்துள்ளது.
இந்நிலையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகமானது இம்மாதம் (ஏப்ரல்) சீனாவில் சுற்றுலா ஊக்குவிப்பு செயற்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும், அதன் மூலம் இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என்றும் ப்ரியந்த பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment