பதினான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவுமே நிரூபிக்கப்படாத நிலையில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனால் நேற்று இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அந்த வகையில், கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த யாழ். வேலணையைச் சேர்ந்த இ. திருவருள், யாழ். கரவெட்டியைச் சேர்ந்த ம. சுலக்ஷன், முள்ளியவளையைச் சேர்ந்த க. தர்ஷன் ஆகிய மூவருமே இவ்வாறு நேற்று (03) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி மூவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இந்நிலையில் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால் மூவரையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலுமிருந்தும் விடுதலை செய்வதாக தீர்ப்பினை வழங்கிய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வகையில் அவர்கள் ஏற்கனவே வழங்கியிருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்தது.
அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன. இதன்போது, அந்த சாட்சியங்கள் அவர்களது குற்றத்தை நிரூபிப்பதற்கு போதுமானதாகவில்லை என்ற காரணத்தினால் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மிக நீண்ட காலம் தடுப்புக் காவலிலிருந்த அரசியல் கைதிகளின் வழக்காக இந்த வழக்கு காணப்படுகிறது.
நேற்று விடுதலையான மூவரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த தமது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியை பரிமாறியதுடன் தமது விடுதலைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment