வருடத்தின் முதல் காலாண்டு முடிவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு : நிதி இராஜாங்க அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 4, 2023

வருடத்தின் முதல் காலாண்டு முடிவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு : நிதி இராஜாங்க அமைச்சர்

இந்த வருடத்தின் முதல் காலாண்டு நிறைவடைவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்காக விசேட கொடுப்பனவை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 

அதேவேளை, அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதும் அரசாங்க ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளத்தை இம்மாதம் 10 க்கு முன்பதாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், அரசாங்க ஊழியர்கள் என்ற வகையில் நாட்டின் தலைவரான ஜனாதிபதியும் அரசாங்கமும் அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியே செயற்பட்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள பல்வேறு நாடுகள், அந்த நிலையை சீர்செய்வதற்காக முதலில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் கைவைக்கவே முற்படுகின்றன. எமது நாட்டில் அவ்வாறான எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. 

பணவீக்கம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக அரசாங்க ஊழியர்கள் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

ஏப்ரல் மாதத்தில் எமக்கு பெருமளவு நிதி சுமை ஏற்படுகிறது. வழமையாகவே மாதத்தின் இறுதியில் 25 ஆம் திகதியில் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படும். 

எனினும், ஏப்ரல் மாதத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 10 ஆம் திகதிக்கு முன்பதாக அவர்களுக்கு சம்பளம் வழங்குவதாக அரசாங்கம் பெரும் நிதிச் சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. 

அதேபோன்று ஓய்வூதியம் மற்றும் சமுர்த்திக் கொடுப்பனவுகளையும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்பதாக வழங்க வேண்டியுள்ளது.

நிதி முகாமைத்துவம் செய்யப்பட்டு அதனை வழங்கியே ஆகவேண்டுமென ஜனாதிபதியும் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்போது இந்த வருட இறுதியில் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்தார். 

எனினும் இந்த வருடத்தின் முதல் காலாண்டு நிறைவடைவதற்குள் விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments:

Post a Comment