10000 ரூபாவுக்கும் குறைந்த விலையில் வழங்குவதற்கான அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்படும் - மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Saturday, April 1, 2023

10000 ரூபாவுக்கும் குறைந்த விலையில் வழங்குவதற்கான அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்படும் - மஹிந்த அமரவீர

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தினால் 18,500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட யூரியா உரத்தை விவசாயிகளுக்கு 10,000 ரூபாவிற்கும் குறைந்த விலைவில் வழங்குவது தொடர்பான அமைச்சரவைப்பத்திரம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்தோடு நிவாரண அடிப்படையில் உரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கூப்பன் வழங்கும் முறைமையை விரைவில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

குருணாகல் - இப்பாகம பிரதேசத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் இந்த உரம் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. சிலர் அமெரிக்காவை விரோதியாகவே பார்த்தனர். இலங்கையைக் கைப்பற்றுவதற்காகவே அமெரிக்கா முயற்சிப்பதாக இப்போதும் குறிப்பிடும் தரப்பினர் உள்ளனர்.

நான் அமைச்சுப் பதவியை ஏற்கும்போது விவசாயிகள் விவசாய நிலத்தில் அன்றி, வீதிகளிலேயே போராடிக் கொண்டிருந்தனர். எனினும் தற்போது விவசாயிகளுக்கு தடையின்றி விவசாயத்தில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க எம்மால் முடிந்துள்ளது.

யூரியா உரம் அரசாங்கத்தினால் 18,500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள போதிலும், 10,000 இற்கும் குறைவான விலையில் அதனை விவசாயிகளுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளோம். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (3) அதனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அதுமாத்திரமின்றி உரத்தைக் கொள்வனவு செய்வதற்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தீர்மானம் தொடர்பில் பேச்சுவார்த்தை மட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

நிவாரண அடிப்படையில் உரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக விவசாயிகளுக்கு கூப்பன் வழங்கும் முறைமையை இதன் ஊடாக நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment