இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வரி சீர்திருத்தத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தால் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமுல்படுத்தப்பட்ட வரி அதிகரிப்பு பொதுமக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்ட போதிலும், கடனாளிகளின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கு இலங்கையில் வரிச் சீர்திருத்தங்கள் அவசியமானது என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை அலுவலகத்தின், சிரேஷ்ட பிரதம செயற்பாட்டு அதிகாரி பீட்டர் ப்ரூவர் மற்றும் அலுவலகத் தலைவர் மசாஹிரோ நோசாக்கி ஆகியோர் கூட்டறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
வரி வருவாயை உயர்த்துவது, ஏழை மற்றும் மிகவும் பாதிக்கப்படக் கூடிய மக்களைப் பாதுகாக்கும் என்று அது கூறுகின்றது.
பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான முறையில் செயற்படுத்த வேண்டும் எனவும் உரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரி சீர்திருத்தம் காரணமாக இலங்கை மக்கள் இந்த நேரத்தில் அனுபவிக்கும் சிரமங்களை தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலை இழப்பு, வாழ்வாதார இழப்பு மற்றும் உண்மையான வருமானத்தின் சரிவு ஆகியவை மக்கள் தொகையில் பெரும் பகுதியை பாதித்துள்ளன.
இந்த சிரமங்களைத் தாங்க முடியாத ஏழை மற்றும் நலிந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அரச வரி வருவாயை ஆதரிக்கக் கூடிய குழுக்கள் உரிய வரிகளைச் செலுத்த முன்வர வேண்டும் என்றும் புதிய வரிக் கொள்கை சர்வதேச தரத்துக்கு ஏற்ப உள்ளது என்றும், அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் பாதித்த காரணங்கள் தொடர்பிலும் இந்த அறிவிப்பில் உண்மைகள் வெளியாகியுள்ளன.
வருவாய் வசூல் மூலம் அரசாங்கத்தின் செலவுத் தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்யவில்லை என்பதும் ஒரு காரணம்.
கடந்த 2021ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வரி வருமானம் சுமார் 7.3% ஆகவும் இருந்துள்ளது.
இதன் மூலம், உலகில் மிகக் குறைந்த நிதி வருமானம் பெறும் நாடுகளில் இலங்கையும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த இடைவெளியை நிரப்ப வெளிநாட்டுக் கடன் வழங்குநர்கள் நிதி உதவி வழங்க விரும்பவில்லை என்றும், அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment