கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் உறவினருக்கு சொந்தமான ஆர்ஜன்டீனாவில் உள்ள பேரங்காடி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு அங்கு மெஸ்ஸிக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பு ஒன்றையும் தாக்குதல்தாரிகள் விட்டுச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை (02) இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆர்ஜன்டீனாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரான ரொசாரியோவில் இருக்கும் யுனிகோ பேரங்காடி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் யார் இலக்கு வைக்கப்பட்டார் என்பது உறுதி செய்யப்படவில்லை.
இந்த பேராங்காடி மெஸ்ஸியின் மனைவி குடும்பத்திற்கு சொந்தமானதமாகும்.
இந்த பேரங்காடிக்குச் சென்ற நகர மேயர் பப்லோ ஜவ்கின், நகரில் போதைக் கடத்தலுடன் தொடர்புபட்ட குற்றங்களை தடுக்கத் தவறி இருப்பது குறித்து மத்திய அரசு மீது குற்றம் சுமத்தினார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகளே யுனிகோ கிளை மீது சரமாரியாக சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு, “மெஸ்ஸி நாம் உங்களுக்காக காத்திருக்கிறோம். ஜவ்கினும் போதைக் கடத்தல் காரர்தான். இதனால் அவர் உங்களை கவனிக்க மாட்டார்” என்ற செய்தி அட்டைப் பெட்டியில் எழுதப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மெஸ்ஸி எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. அவர் தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக ஆடிவருவதோடு பெரும்பாலான காலத்தை வெளிநாட்டிலேயே கழித்து வருகிறார். எனினும் அவர் ரொசாரியோ நகருக்கு அடிக்கடி பயணிப்பவராக உள்ளார். அதன் புறநரான பூனஸில் அவரின் வீடு ஒன்று உள்ளது.
இந்நிலையில் அவரது பிரான்ஸ் கழகம் கடந்த வியாழக்கிழமை பயிற்சியில் ஈடபட்டிருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக தளத்தில் பதிவிட்டது.
மெஸ்ஸி மீது இவ்வாறான அச்சுறுத்தல் ஒன்று விடுக்கப்படுவது இது முதல்முறை என்று ரொசாரியோ, அரச வழக்கறிஞர் பெப்ரிகோ ரெபோலா தெரிவித்துள்ளார்.
இரு நட்புறவுப் போட்டிகளில் ஆடுவதற்காக மெஸ்ஸி இம்மாத கடைசியில் ஆர்ஜன்டீனா திரும்பி தேசிய அணியுடன் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதில் ஒரு போட்டி வரும் மார்ச் 23 ஆம் திகதி பானாமா அணிக்கு எதிராக பூனோஸ் எயார்ஸில் இடம்பெறவிருப்பதோடு மற்ற போட்டி ஐந்து நாட்கள் கழித்து குராக்கோவுக்கு எதிராக நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment