(இராஜதுரை ஹஷான)
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை பெருமையாக கொள்ளவில்லை, அந்த பதவியை துறக்க தயாராகவே உள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படும் தீர்மானம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யாப்பு கொள்கைக்கும், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கும் எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கும், கட்டளைக்கும் அமைய செயற்படுகிறது.
அடிப்படை கொள்கைக்கு முரணாக செயற்பட முடியாது என்ற காரணத்தினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் 33 பேரை உள்ளிடக்கிய ஒரு சுயாதீன அணியாக செயற்படுகிறோம்.
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் சுயாதீன தரப்பினரை அரசியல் மட்டத்தில் பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
கட்சியின் கொள்கைக்கு அமைய செயற்படுவதால் கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எமக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாங்கள் பொதுஜன பெரமுனவின் கொள்கையை எந்த காரணிகளினால் மீறியுள்ளோம் என்பதை சாகர காரியவசம் தெளிவுப்படுத்தவில்லை.
எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது, முறையற்ற வகையில் செயற்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.
பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து என்னை நீக்குவதாக குறிப்பிடப்படுகிறது. நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு வழங்கிய மக்களாணை முழுமையாக இல்லாதொழிந்துள்ளபோது தவிசாளர் பதவியை வகிப்பதை நான் பெருமையாக கொள்ளவில்லை. பதவி துறக்க தயாராகவே உள்ளேன்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் கட்சி பலவீனமடைந்துள்ளது.
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment