மக்களுக்குத் தேவை தேர்தல் அல்ல உணவுதான் : சுகாதார அமைச்சினை ஏற்கத் தயார் - ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Saturday, March 4, 2023

மக்களுக்குத் தேவை தேர்தல் அல்ல உணவுதான் : சுகாதார அமைச்சினை ஏற்கத் தயார் - ராஜித சேனாரத்ன

(எம்.மனோசித்ரா)

வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு சகலருக்கும் காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது தேர்தலை விட, மக்களுக்கு உண்ண உணவளிப்பதற்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அத்தோடு தற்போது சுகாதார அமைச்சினை ஏற்று, சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் தான் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அடக்குமுறைகளை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் எதிர்க்கின்றோம். அதேபோன்று மறுபுறம் நாடு எதிர்கொண்டுள்ள அராஜக நிலைமையும் நினைவில் கொள்ள வேண்டும். பேரணி செல்பவர்கள் மாத்திரமின்றி, மேலும் பலர் வறுமையில் உணவின்றி தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

புற்று நோயாளர்கள் தமக்கான மருந்தின்றி வேதனையிலுள்ளனர். இவ்வாறானதொரு நாட்டிலேயே நாம் அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம். இவற்றுக்கும் தீர்வு காணும் வகையிலேயே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு சகலருக்கும் காணப்படுகிறது. இந்த பொறுப்பிலிருந்து எம்மால் விலக முடியாது. நாம் அரசியலில் ஈடுபடுவதற்காக வருகை தந்திருக்கின்றோமே தவிர, கட்சி அரசியல் செய்வதற்காக அல்ல.

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு வேறு எவரும் முன்வரவில்லையல்லவா? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே முன்வந்தார். இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் அல்ல, மக்களுக்கு உண்பதற்கு உணவளிப்பதே முக்கியத்துவமுடையது. அவ்வாறன்றி தேர்தல் நிறைவடையும் வரை மக்களுக்கு உணவளிக்காமல் அவர்களை மரணிக்கச் செய்ய முடியுமா?

அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயற்பாடுகள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன. இனிவரும் காலங்களிலும் இடம்பெறும். எனக்கு தற்போதைய சூழலில் சுகாதார அமைச்சு வழங்கப்படுமானால் சுகாதாரத் துறையில் காணப்படும் சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றார்.

No comments:

Post a Comment