தொல்பொருள் திணைக்களத்தின் இன, மத ரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன் - News View

About Us

Add+Banner

Friday, March 31, 2023

demo-image

தொல்பொருள் திணைக்களத்தின் இன, மத ரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன்

22-6390744077d53
(நா.தனுஜா)

மத்திய அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் தற்போது முன்னெடுத்துவரும் இன, மத ரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவில் அழிக்கப்பட்டமையையும் கடந்த சில மாதங்களாக குருந்தூர் மலை, கண்ணியா உட்பட பல வணக்கஸ்தலங்களில் சிவ வழிபாடு தடுக்கப்பட்டு, குறித்த இடங்களை பௌத்த மரபுரிமைகளாக, விகாரைகளாக மாற்றுவதற்குத் தொல்பொருள் திணைக்களமும் படையினரும் இணைந்து நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமையையும் நாம் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

அரசாங்க தொல்பொருள் திணைக்களத்தினரும், படையினரும் முக்கியமானதொரு விடயத்தை மறந்துவிட்டார்கள். தற்போது இந்துக்கள் வணங்கும் வணக்கஸ்தல வளாகங்களில் பௌத்த எச்சங்கள் இருப்பது உண்மை என்றால், அவை தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த காலத்தவையாக இருக்க வேண்டும். அதனை முதலில் தொல்பொருள் திணைக்களம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் தமது பௌத்த சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணாத நிலையில், சிங்கள பௌத்தவர்கள் இந்தக் காரியத்தில் இறங்கியமையானது குறித்த சின்னங்கள் உள்ள இடங்கள் சிங்கள பௌத்த காலத்துக்குரியவை என்று காண்பிப்பதற்கேயாகும்.

ஆனால் சிங்கள பௌத்தர்கள் குறித்த இடங்களில் என்றென்றுமே வாழ்ந்ததில்லை. தமிழ் பௌத்தர் கால எச்சங்களை சிங்கள பௌத்த கால எச்சங்கள் என்று காண்பிக்க முயலும் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கை உடனே நிறுத்தப்பட வேண்டும்.

முதலில் குறித்த எச்சங்கள் எந்தக் காலத்துக்குரியவை என்று அறிந்து, அக்காலப்பகுதியில் சிங்கள மொழியும் சிங்கள இனமும் இருந்ததா என அறிந்த பின்னர், இவை தொடர்பில் தமிழ் மக்களுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

அவை தமிழ் பௌத்த கால சின்னங்கள் எனில், அவை குறித்து மாகாண சபைகளின் ஊடாகவே உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோன்று மத்திய அரசின் கீழான தொல்பொருள் திணைக்களம் இத்தகைய இன, மத ரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அதேபோன்று எமது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நடாத்துகின்ற கண்டனப் போராட்டத்துக்கு நாம் எமது ஆதரவை வெளிப்படுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *