நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு சமீபத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், இவை போலியானது என்றும் இந்த கௌரவ டாக்டர் பட்டத்திற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஓடிட்டோரியத்தில் கடந்த ஞாயிறன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது.
இதில், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி - சுதாகர் உட்பட 30 க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்துகொண்ட கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.
நடிகர் வடிவேலு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத நிலையில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தை சேர்ந்தவர்கள் வடிவேலுவின் வீட்டிற்கே சென்று கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினர்.
இந்நிலையில், பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் போலியானது என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புதனன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், “சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டத்திற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஓடிட்டோரியத்தை கடந்த நவம்பர் மாதமே அந்த அமைப்பு வாடகைக்கு கேட்டனர். எனினும், எங்கள் டீன் இதற்கு மறுத்துவிட்டார்.
இந்நிலையில்தான், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பரிந்துரைத்தது போன்ற கடிதத்துடன் அவர்கள் மீண்டும் அணுகியுள்ளனர்.
விருது நிகழ்ச்சி என்றுதான் குறிப்பிட்டிருந்தனரே தவிர கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா என்று எங்கும் குறிப்பிடவில்லை. எனவே, அவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது. வள்ளிநாயகத்தையும் அவர்கள் ஏமாற்றியிருக்கலாம். இரு தரப்பையும் அவர்கள் உபயோகப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக பொலிஸில் புகார் அளிப்போம்” என்றார்.
“வள்ளிநாயகம் வழங்கியது போன்ற பரிந்துரை கடிதத்தை அவர்கள் போலியாக வழங்கியிருக்கலாமோ என்று சந்தேகப்படுகிறோம். இந்த சம்பவத்தில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்த அவர், “இனி மிக முக்கியமான தனியார் நிகழ்ச்சியை தவிர பிற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்” என்றார்.
“கௌரவ டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகம்தான் வழங்க முடியும். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டதால் வந்திருந்த பிரபலங்கள் எதையும் யோசிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், உண்மை நிலையை அவர்கள் இறுதியில் உணர்ந்திருப்பார்கள்” என்றும் வேல்ராஜ் குறிப்பிட்டார்.
சர்ச்சையில் சிக்கியுள்ள சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம், இது போன்ற கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கும் நிகழ்வை இதற்கு முன்பே நடத்தியுள்ளது. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், யோகிபாபு, இசையமைப்பாளர் டி. இமான் போன்ற பிரபலங்களுக்கு இந்த ஆணையம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கியதற்கு முக்கிய காரணம், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஓடிட்டோரியத்தில் விருது வழங்கப்பட்டதுதான். அண்ணா பல்கலைக்கழகமே இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது போன்ற பிம்பத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது. இந்நிலையில், தங்களுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
விருது பெற்றவர்களில் ஒருவரான ஈரோடு மகேஷை தொடர்புகொண்டு பேசினோம். “அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக விருது தருவதாக எதுவும் என்னிடம் கூறவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று மட்டும்தான் கூறினர். வள்ளிநாயகம் போன்றவர்கள் கையால் கௌரவ டாக்டர் பட்டம் வாங்குவது கௌரவமாக இருக்கும் என்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்” என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள் பணத்தை வசூலித்து கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியிருக்கலாமோ என்ற ஐயம் இருப்பதாகவும் வேல்ராஜ் கூறியிருந்தார்.
இது தொடர்பாக ஈரோடு மகேஷிடம் கேட்டபோது, கௌரவ டாக்டர் பட்டத்திற்காக தன்னிடம் எந்த தொகையையும் அவர்கள் கேட்கவில்லை என்றார்.
விழாவில் கலந்துகொண்டு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கிய ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் பேசுகையில், “அன்றைக்கு மட்டும் நான் நான்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த நபர்கள் ஏற்கனவே இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். எனவேதான் நான் கலந்துகொண்டேன். மற்றபடி எனக்கும் அந்த நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியது போன்ற ஒரு பிம்பம் ஏற்பட்டதுதான் பிரச்சனைக்கு காரணம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஓடிட்டோரியத்தில் இடம் வழங்குவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நான் எந்த பரிந்துரை கடிதமும் வழங்கவில்லை. ஒருவேளை, எனது பெயரில் அவர்களே போலியாக கடிதத்தை வழங்கியிருந்தால் சட்ட நடவடிக்கைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்வேன்” என்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் கருத்தை அறிய அவர்களை தொடர்புகொண்டோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.
No comments:
Post a Comment