(நா.தனுஜா)
இலங்கை சர்வதேசத்தின் கடன் சலுகை மற்றும் நிதியியல் உதவியை உடனடியாகப் பெற்றுக் கொள்வதற்கு பொருளாதார ரீதியான மறுசீரமைப்புக்கள் தொடர்பான முறையான கலந்துரையாடலும், தொய்வடையாத அமுலாக்கமும் இன்றியமையாதவையாகும் என்று உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியப் பிரதித் தலைவர் மார்டின் ரெய்ஸர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியப் பிரதித் தலைவர் மார்டின் ரெய்ஸர் கடந்த 25 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையுடன் அவரது விஜயம் முடிவுக்குவந்துள்ளது.
இவ்விஜயத்தின்போது பொருளாதார ரீதியான சவால்களிலிருந்து நாடு மீட்சியடைவதற்கும், முக்கிய மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கியதும் மீண்டெழக்கூடிய தன்மையுடையதுமான பாதையில் பயணிப்பதற்கும் இலங்கைக்குத் தொடர்ச்சியான ஆதரவை வழங்கத்தயாராக இருப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியப் பிரதித் தலைவர் உறுதியளித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இவ்விஜயத்தின்போது மார்டின் ரெய்ஸர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரியின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளிகள், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக தீர்மானங்களை மேற்கொள்ளும் முக்கிய தரப்பினர், சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மார்டின் ரெய்ஸர், 'நாடு முகங்கொடுத்திருக்கும் நுண்பாகப் பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியின் விளைவாக இலங்கை மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு புதியதொரு அபிவிருத்தி மாதிரி செயற்திட்டம் அவசியம் என்பதை இந்த நெருக்கடியின் ஆழம் நன்கு புலப்படுத்தியுள்ளது. இருப்பினும் அதற்கு வலுவான நம்பிக்கையும் அரசாங்கத்தின் மறுசீரமைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வும் இன்றியமையாதவையாகும்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மக்கள் தமது பொறுமையையும் மாறுதலடைவதற்கான வாய்ப்பையும் இழந்துவிடாதிருப்பதை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் சர்வதேசத்தின் கடன் சலுகை மற்றும் நிதியியல் உதவியை உடனடியாகப் பெற்றுக் கொள்வதற்கு மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பான முறையான கலந்துரையாடலும், தொய்வடையாத அமுலாக்கமும் அவசியமாகும்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை கட்டமைப்பு ரீதியான வலுவாக்கம், நிதியியல் கண்காணிப்பு மற்றும் முறையான கடன் முகாமைத்துவம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் பொருளாதார நிர்வாகத்தை மாற்றியமைப்பதற்குத் தேவையான மறுசீரமைப்புக்களின் முன்னேற்றம் குறித்தும் உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியப் பிரதித் தலைவர் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்.
அதுமாத்திரமன்றி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் மக்களின் நிலையான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு மீயுயர் வெளிப்படைத்தன்மை, செயற்திறன் மிக்க நிர்வாகம், வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான ஆதரவு, வறியமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்பன இன்றியமையாதவையாகும் என்றும் மார்டின் ரெய்ஸர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் சார்ந்து முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களைப் பார்வையிடுவதற்காக மார்டின் ரெய்ஸர் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment