(இராஜதுரை ஹஷான்)
ஆளும் தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.
புதிய அமைச்சரவை நியமனத்திற்காக பொதுஜன பெரமுனவின் 10 உறுப்பினர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
தற்காலிகமாக அமைச்சரவைக்கு பதிலாக சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
பல்வேறு காரணிகளினால் நிலையான அமைச்சரவை நியமனம் இழுபறி நிலையில் இருந்த நிலையில் இந்த மாதத்திற்குள் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஜோன்ஷ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.எம்.சந்திரசேன, காமினி லொகுகே, சி.பி ரத்நாயக்க, அட்மிரல் சரத் வீரசேகர, ஜனக பண்டார தென்னகோன் உட்பட 10 பேரின் பெயர்கள் இவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களின் பெயர் புதிய அமைச்சரவை நியமனத்திற்கு பரிந்துரைக்கப்படவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி மட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.
புதிய அமைச்சரவையில் துறைமுகம், நெடுஞ்சாலைகள், விவசாயம், போக்குவரத்து, பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி உள்ளிட்ட அமைச்சுக்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன.
தற்போது 22 ஆக உள்ள அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment