அங்கீகாரம் வழங்கியது துருக்கி : நேட்டோவில் இணைகிறது பின்லாந்து - News View

About Us

About Us

Breaking

Friday, March 31, 2023

அங்கீகாரம் வழங்கியது துருக்கி : நேட்டோவில் இணைகிறது பின்லாந்து

நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதற்கு துருக்கி பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் நேட்டோவின் 31 ஆவது அங்கத்தவராக பின்லாந்து விரைவில் இணையவுள்ளது.

ரஷ்யாவின் எல்லையில் பின்லாந்து அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேட்டோவில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு அதன் 30 அங்கத்துவ நாடுகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும்.

பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் கடந்த மே மாதம் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன. அணிசேரா கொள்கையைக் கடைபிடித்த இந்நாடுகள், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு நேட்டோவில் இணைவதற்கு தீர்மானித்தன.

நேட்டோவின் 29 நாடுகள் சுவீடன், பின்லாந்தின் விண்ணப்பத்தை அங்கீகரித்திருந்த நிலையில், துருக்கியும், ஹங்கேரியும் தயக்கம்காட்டி வந்தன.

பின்லாந்தின் இணைவுக்கு ஹங்கேரி கடந்த திங்கட்கிழமை அங்கீகாரம் வழங்கியது. இந்நிலையில் துருக்கியின் பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அங்கீகாரம் வழங்கியது.

துருக்கியின் ஜனாதிபதி தையீப் அர்துகான் ஏற்கெனவே இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். இதன்படி, பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கான கடைசி தடங்கல் நீக்கியுள்ளது.

'நேட்டோவின் 30 நாடுகளும் பின்லாந்தின் அங்கத்துவத்தை அங்கீகரித்துள்ளன. அவர்களின் நம்பிக்கைகக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' என பின்லாந்து பிரதமர் சவ்லி நீனிஸ்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேட்டோவில் சுவீடன் அங்கத்துவம் பெறுவதற்கு ஹங்கேரியும், துருக்கியும் அங்கீகாரம் வழங்க தொடர்ந்து மறுத்து வருகின்றன.

No comments:

Post a Comment