திறைசேரி, அரச அச்சகம் உட்பட அரசியல் கட்சித் தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தை - தேர்தல் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 4, 2023

திறைசேரி, அரச அச்சகம் உட்பட அரசியல் கட்சித் தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தை - தேர்தல் ஆணைக்குழு

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான புதிய திகதியை எதிர்வரும் 09 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் திறைசேரியின் செயலாளரிடம் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கான புதிய திகதியை இம்மாதம் 3ஆம் திகதி அறிவிப்பதாக குறிப்பிடப்பட்டது. இதற்கமைய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி.திவாரத்ன, எம்.எம்.மொஹமட், கே.பி.பி.பதிரன உட்பட தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஒன்றுக்கூடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினர்.

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திறைசேரி நிதி விடுவிப்பை தடுத்துள்ளமை, நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் உள்ளதால் நிதி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்றம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கடந்த வாரம் அனுப்பி வைத்த கடிதம் உட்பட முக்கிய காரணிகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து நிதியமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது உயர் நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை கருத்திற் கொண்டு திறைசேரியின் செயலாளர், அரச அச்சகத் திணைக்களத்தின் தலைவர் உட்பட அரசியல் கட்சி தலைவர்களுடன் இவ்விரு தினங்களுக்குள் விசேட பேச்சுவார்த்தையை மேற்கொண்டு எதிர்வரும் வாரம் முதலிரு தினங்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பை பெப்ரவரி மாதம் 22, 23, 24 மற்றும் 28 ஆகிய தினங்களிலும்,சாதாரண வாக்கெடுப்பை மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பத்தில் தீர்மானித்தது.

வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான நிதியை வழங்காமல் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை தொடர முடியாது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி அறிவித்ததை தொடர்ந்து வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டதன.

இதனை தொடர்ந்து தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து தேர்தலுக்கு பல சிக்கல் நிலை தோற்றம் பெற்றது.

நிதி நெருக்கடி மற்றும் இதர சேவைகள் கிடைப்பனவில் சிக்கல் நிலை ஆகிய காரணிகளை கருத்திற் கொண்டு தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த மாதம் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தீர்மானித்ததற்கு அமைய மார்ச் 09 ஆம் திகதி நடத்த முடியாது என உத்தியோகப்பூர்மாக அறிவித்தது.

No comments:

Post a Comment