(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வரை எந்தத் தேர்தலையும் நடத்த இடமளிக்கப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார். சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்களுக்கு அமைச்சரவை ஊடாக ஒரு தீர்மானத்தை அரசாங்கம் வழங்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரச சேவையாளர்கள் தேர்தலில் போட்டியிட தீர்மானிப்பார்களாயின் அவர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறை வழங்கப்படும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் வேட்பு மனுத் தாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டு நான்கு வார காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் பிரகாரம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலில் போட்டியிட சம்பளமில்லாத விடுமுறை நிபந்தனைக்கு உட்பட்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்தார்கள்.
கிடைக்கப் பெறும் மாதச் சம்பளம் ஒரு வார காலத்திற்கும் போதுமானதாக இல்லாதபோது தேர்தல் இடம்பெறும் வரை அரச சேவையாளர்களினால் சம்பளமில்லாத விடுமுறையில் இருக்க முடியுமா?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகிறார். அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் வரை எந்தத் தேர்தலையும் நடத்தக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்றால் அதன் பெறுபேறு அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிராக அமையும் அது ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கு அறிவார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறையற்ற வகையில் பிற்போடப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருந்தாலும், அதற்கு ஜனாதிபதி இடமளிக்கமாட்டார். தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியை விடுவிக்க ஜனாதிபதி தயாராக இல்லை.
ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாட்டினால் அரச சேவையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சம்பளமில்லாத விடுமுறையில் எவ்வளவு காலம் அரச சேவையாளர்களினால் இருக்க முடியும்.
இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் அமைச்சரவை ஊடாக ஒரு தீர்மானத்தை வழங்காவிட்டால் நீதிமன்றத்தின் ஊடாக நியாயத்தை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment