சிறுவனின் உயிரை காவு கொண்ட குட்டை : விரைந்து நடவடிக்கை எடுக்க சம்மாந்துறை தவிசாளர் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 27, 2023

சிறுவனின் உயிரை காவு கொண்ட குட்டை : விரைந்து நடவடிக்கை எடுக்க சம்மாந்துறை தவிசாளர் தீர்மானம்

நூருள் ஹுதா உமர்

கல்குவாரி குட்டையை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவுள்ளதாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம்-1 கிராம சேவகர் பிரிவில் உள்ள, அறபா பள்ளிவாசல் பிரதேசத்தில் கல்குவாரியினால் உருவான ஆழமான குட்டையில் நீர் காணப்பட்டதினால் அப்பிரதேசத்தினைச் சோ்ந்த 12 வயதுடைய சிறுவர் ஒருவன் குளிப்பதற்காக குதித்து உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, இப்பிரதேசத்தில் இச்சம்பவம் இனியும் இடம்பெறக்கூடாது என்பதற்காக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் தலைமையில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.கபீர், பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்களான பீ.எம்.றியாழ், எஸ்.நளீம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல். றாசீக், கிராம சேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடத்திற்கு இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்பிரதேசத்தில் வாழும் மக்களிடம் சென்று இக்குட்டை தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பற்ற வகையில் காணப்படும் இதனை மூடித்தந்தால் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெறாமல் பாதுகாக்க முடியும் என்று பொதுமக்கள் தவிசாளரிடம் தெரிவித்தனர்.

அத்துடன் இக்கல்குவாரி குட்டை சுமார் 20 வருடங்களாக உபயோகிக்கப்படாமல் காணப்படுவதாகவும் சுமார் கிட்டத்தட்ட 30 அடி ஆழமாகவுள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மூடுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுவதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்யுமாறு பிரதேச சபை செயலாளருக்கு பணிப்புரை வழங்கியதுடன், முடியுமான வரை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தவிசாளர் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment