யார் காரணமென ஆராய தெரிவுக் குழுவை நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம் - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 27, 2023

யார் காரணமென ஆராய தெரிவுக் குழுவை நியமிக்குமாறு வலியுறுத்தியுள்ளோம் - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு யார் காரணம் என்பது தொடர்பில் ஆராய விசேட பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளோம். யார் நாட்டை சீரழித்தார்கள், யார் அபிவிருத்தி செய்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பொருளாதாரத்தையும், தேசியத்தையும் முன்னிலைப்படுத்தி செயற்பட்டதால் நாட்டு மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.

தவிர்க்க முடியாத காரணிகளினால் பொதுஜன பெரமுன தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கம் பலவீனமடைந்தது.

30 வருட கால யுத்தத்தை வெற்றி கொண்டு நாட்டின் இறையான்மையை பாதுகாத்த ராஜபக்ஷர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் மீண்டும் அதே குற்றச்சாட்டுக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்த்தரப்பினர் அரசியல் பிரசாரம் செய்து கொள்கிறார்கள். நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு யார் காரணம் என்பதை ஆராய பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவை ஸ்தாபிக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக திட்டமிட்ட வகையில் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க சன்ன ஜயசுமன உள்ளிட்ட தரப்பினரது ஒத்துழைப்பை கோர வேண்டிய தேவை எமக்கு கிடையாது. பொய்யான கருத்துக்களை குறிப்பிட்டு நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள். பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த எவ்வித பேச்சுவார்த்தையும் முன்னெடுக்கப்படவில்லை.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதத்துடன்தான் தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்பட்டார், அவர் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர், பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர் இணக்கமாக செயற்படுகிறார், ஆகவே பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றார்.

No comments:

Post a Comment