(இராஜதுரை ஹஷான்)
தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபடமாட்டோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். ஜனநாயகத்தை தாமதப்படுத்தும் ஒவ்வொரு தருணமும் அரசாங்கத்தின் அழிவு தீவிரமடையும் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த மக்களையும் ஒன்றிணைத்து ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தை வெகுவிரைவில் விரட்டியடிப்போம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
டவுன்வோல் சுற்றுவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியில் புறக்கணித்ததை மறந்துவிட்டு தான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்று நினைத்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழு இலங்கையும் தடை செய்யப்பட்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியால் நிறைவேற்றுத்துறை அதிகாரம் செயற்படுத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷர்களின் சகாக்களினால் இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொலைகாரர்கள், தங்க சங்கிலி திருடன், கப்பம் பெற்றவர்கள் ஆகியோரின் ஆதரவுடன்தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
தனக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மக்கள் வெள்ளத்தை கண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அச்சமடைந்துள்ளார். விக்ரமசிங்க, ராஜபக்ஷ, பண்டாரநாயக்க, பிரேமதாஸ ஆகிய குடும்ப ஆட்சியை நாட்டு மக்கள் இனியொரு போதும் தோற்றுவிக்க மாட்டார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு ஒரு வார காலம் உள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார். அதிகாரம் ராஜபக்ஷர்கள் பக்கம் அல்லது பிரேமதாஸ பக்கம் செல்வதாக இருந்தால் ஜனாதிபதி அச்சமடைந்திருக்க மாட்டார்.
மக்களாணை தேசிய மக்கள் சக்திக்கு ஒன்று திரண்டுள்ளதை கண்டு அச்சமடைந்து சூழ்ச்சி செய்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபடமாட்டோம், நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். ஜனநாயகத்தை தாமதப்படுத்தும் ஒவ்வொரு தருணமும் அரசாங்கத்தின் அழிவு தீவிரமடையும் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தான் ஹிட்லராவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகிறார். ஹிட்லர் உயிருடன் இருந்தால் வெட்கத்தில் மீண்டும் தற்கொலை செய்து கொள்வார்.
ஜனாதிபதி ரணில் பாவம் ராஜபக்ஷர்களை பாதுகாக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை தற்போது செயற்படுத்துகிறார். அரசாங்கத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு அனைத்தும் வெகுவிரைவில் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பும் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு நாட்டு மக்கள் பொறுப்புக்கூற வேண்டும். ஆட்சியாளர்கள் அரச நிதியை மோசடி செய்ததன் விளைவை அப்பாவி மக்கள் தற்போது அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
ரணிலை திருடர் என்று விமர்சித்தவர்களும், மஹிந்த ராஜபக்ஷவை திருடர் என விமர்சித்தவர்களும் ஒன்றிணைந்து தற்போது ஆட்சியமைத்துள்ளார்கள். ரணில் - ராஜபக்ஷ திருட்டு கூட்டணியால் மோசடி செய்யப்பட்ட அரச நிதியை எவ்வாறு அரசுடமையாக்க முடியும்.
அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒருமுகப்படுத்துவோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களை பழிவாங்குகிறார். 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தன்னை புறக்கணித்தார்கள். இதனால்தான் அவர் நாட்டு மக்களின் வாக்குரிமைக்கு தடையாக உள்ளார்.
பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களை பழிவாங்குகிறார். நாட்டு மக்களுக்கு வினையாக உள்ள ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தை வெகுவிரைவில் விரட்டியடிப்போம் என்றார்.
No comments:
Post a Comment