(எம்.மனோசித்ரா)
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும்.அரசாங்கத்தின் இது போன்ற அடக்குமுறைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித நிபந்தனையும் இன்றி எதிர்ப்பினை வெளியிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசாங்கத்தினால் தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையின் காரணமாக பலர் காயமடைந்துள்ளமையானது, ஜனநாயகத்திற்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலாகும்.
எந்தவொரு கட்சியோ அல்லது தலைவரோ எல்லா சந்தர்ப்பங்களிலும் சரியானவர்களாக இருந்ததில்லை. தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் என்பவற்றை மேற்கொண்டதன் ஊடாக, அதில் கலந்து கொண்ட மக்களை அரசாங்கம் அச்சுறுத்தியுள்ளது.
ஜனநாயகத்தைக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை சத்தமின்றி அமைதியாக இருக்குமாறு அரசாங்கம் எச்சரிக்கின்றது. ஜனநாயகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு தாக்குதலுக்கும் நிபந்தனைகள் இன்றி ஐக்கிய மக்கள் சக்தி அதன் எதிர்ப்பினை தெரிவிக்கும்.
No comments:
Post a Comment