(எம்.ஆர்.எம். வசீம்)
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவது தொடர்பான நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என தகவல் அறியும் ஆணைக்குழு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிறுத்தியுள்ளது. அதன் பிரகாரம் கிடைக்கும் பதிலுக்கமைய நீதிமன்றத்தை நாடுவோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இரட்டை பிரஜா உரிமை உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு பெப்ரல் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீடு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை பிரஜா உரிமை உள்ள உறுப்பினர்கள் தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அது தொடர்பாக வழங்குமாக இருந்தால் அது தொடர்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடுவோம். இது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருந்த மேன்முறையீடு கடந்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவது சம்பந்தமாக தங்களின் நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என ஆணைக்குழுவினால் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் குறித்த அதிகாரிகளால் வழங்கப்படும் பதிலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.
அத்துடன் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் நாட்டில் இருப்பது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் நாட்டில் தீர்மானம் எடுக்கும் இடங்களில் பதவி வகிப்பது பொருத்தமில்லை. அது எமது நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பாகவும் அமையும்.
குறிப்பாக நாட்டில் சட்டம் இயற்றும் பாராளுமன்றத்தில் இவர்கள் இருந்து, சட்ட மூலம் அனுமதிக்கப்படும்போது, அவர்கள் நாட்டுக்கு பூரண நம்பிக்கையுடன் செயற்படுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது என்றார்.
No comments:
Post a Comment