காத்தான்குடி ஷாஜகான் ஆசிரியர், அவரின் மகள் மரணங்கள் : நடந்தது என்ன ? - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 7, 2023

காத்தான்குடி ஷாஜகான் ஆசிரியர், அவரின் மகள் மரணங்கள் : நடந்தது என்ன ?

காத்தான்குடியைச் சேர்ந்த இருவரின் மரணத்தினால் முழு தம்பாலை கிராமமே சோகத்தில் மூழ்கியது.

பொலனறுவை மாவட்டம் தம்பாலை ஆற்றை (வாவி) பார்வையிடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும், மகளும் தவறி விழுந்து காணாமல் போனதில் இருவரும் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (07) செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில பாட ஆசிரியர் ஷாஜகான் என்பவரும் (வயது 46) மற்றும் அவரது பிள்ளைகள் அடங்களாக 5 பேர் பொலனறுவை மாவட்டம் தம்பாலை ஆறை பார்வையிடச் சென்றுள்ளனர்.

பாடசாலை விடுமுறை என்பதால் பிள்ளைகள் சகிதம் நேற்று திங்கட்கிழமை மாலை இவர்கள் காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவை மாவட்டத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இன்று காலை இவர்கள் தம்பாலையில் ஆற்றை பார்வையிடச் சென்று அங்கு நீரோட்டத்தை ரசித்துக் கொண்டு ஆற்றின் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஆசிரியரின் மகள் சயான் பரிசாத் (12 வயது) என்பவர் ஆற்றினுள் தவறி விழுந்துள்ளார்.

தனது மகளை காப்பாற்ற தந்தை ஆற்றினுல் இறங்க ஆறு ஆழமாக இருந்ததால் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதையடுத்து ஆசிரியரின் மனைவி மற்றும் ஏனைய பிள்ளைகளும் கூக்குரலிட்டு அழ பொதுமக்கள் ஒன்று திரண்டு நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தந்தை ஆங்கில பாட ஆசிரியர் ஷாஜகானின் ஜனாஸா முதலிலும் பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பின்பு மகளின் ஜனாஸாவும் மீட்கப்பட்டன. தற்போது ஜனாஸா பொலனறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

நாளை பிரேதப் பரிசோதனையின் பின் ஜனாஸா உறவினர்களிடம் கையளிக்கப்படும் என தெரியவருகிறது. இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஷாஜகான் ஆசிரியரின் மகள் சயான் பரிசாத் (12 வயது) காத்தான்குடி நூறானிய்யா வித்தியாலயத்தில் 7ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.

ஆசிரியர் ஷாஜகான் பொலன்னறுவை மாவட்டத்தின் புதூரிலிலுள்ள பாடசாலையொன்றில் பிரதி அதிபராகவும் ஆங்கில பாட ஆசிரியராகவும் கடமையாற்றி வந்தார்.

இந்த சம்பவம் குறித்து விபரிக்கும் தம்பாலை பள்ளிவாயல் பொருளாளர் தனது 42 வருட வரலாற்றில் இந்த ஆற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இதுவே முதல் தடவையாகும்.

இன்று இந்த சம்பவத்தை கேள்வியுற்ற எமதூர் சோகத்தில் ஆழ்ந்து போனது. ஊரின் இளைஞர்களில் அரைவாசிப் பேர் ஆற்றில் இறங்கி இவர்களை தேடும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டார்கள். இது ஒரு பெரிய ஆறு கிடையாது. நாங்கள் எங்களது ஊர் மக்கள் அடிக்கடி இதில் குழிப்பார்கள்.

ஆனால் மழைக் காலம் என்பதால் நீர் அதிகமாக காணப்படுகிறது. அத்தோடு கொஞ்சம் ஆழமாக தோண்டியும் விட்டுள்ளதால் நீரோட்டமும் கூட காணப்படுகிறது. எங்களது முழு ஊருமே இந்த சம்பவத்தினால் கவலையடைகின்றது என தெரிவித்தார்.

எம்.எஸ்.எம். நூர்தீன்

No comments:

Post a Comment