தனித்து போட்டியிடுமாறு பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 31, 2023

தனித்து போட்டியிடுமாறு பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. கொள்கை அடிப்படையில் இரு தரப்பிற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. தனித்து போட்டியிட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டணியமைத்து போட்டியிடுவது தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கு எதிராகவே மக்கள் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி, பொதுஜன பெரமுன தலைமையிலான பலமான அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள்.

கொவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தை தொடர்ந்து பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் பொருளாதார நெருக்கடியை அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியல் கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது என்ற காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டியிடுவோம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. பொதுக் கொள்கை ஒன்றை அடிப்படையாகக் கொண்டு கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை ஒரு இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளில் 252 அதிகார சபைகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டுச் சின்னத்தில் தனித்து போட்டியிடும். வடக்கு மாகாணத்தில் வீணை சின்னத்திலும், கிழக்கு மாகாணத்தில் படகு சின்னத்திலும் போட்டியிடுவோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனித்துவத்தை அடையாளப்படுத்தி தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். அனைத்து தரப்பினரது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து உரிய தீர்மானம் வெகுவிரைவில் எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment