அரச நிறுவனங்களில் வீண்விரயமாகும் மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டத்தை செயற்படுத்த வேண்டும் : இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனை குழு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 31, 2022

அரச நிறுவனங்களில் வீண்விரயமாகும் மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டத்தை செயற்படுத்த வேண்டும் : இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனை குழு

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை விடுத்து, அரச நிறுவனங்களில் வீண்விரயமாகும் 10 சதவீத மின்சாரத்தை சேமிக்கும் புதிய திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் நுகர்வோர் ஆலோசனை குழுவின் தலைவர் நிமல் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டு மக்களை ஏழ்மை நிலைக்கு தள்ளி பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதே தவிர மக்களுக்கு சாதகமாக அமையவில்லை.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்கியது. மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பரிந்துரைக்கு ஆணைக்குழு முழுமையாக அனுமதி வழங்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட மின் கட்டண அதிகரிப்பையும் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்கு நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான பின்னணியில் மின் கட்டணத்தை 60 முதல் 65 சதவீதமளவில் மீண்டும் அதிகரிப்பதற்கு மின்சாரத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் மின் கட்டணத்தை அதிகரிக்கும் அதிகாரம் மின்சாரத்துறை அமைச்சருக்கு கிடையாது.

மின் கட்டணத்தை அதிகரிக்காமல் மின் கட்டமைப்புக்கு துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல திட்டங்களை மின்சாரத்துறை சபையிடம் முன்வைத்துள்ளோம். முகாமைத்துவ திட்டங்களை செயற்படுத்துவதை விடுத்து மின் கட்டணத்தை அதிகரிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது.

மொத்த மின் வீண்விரயத்தில் 10 சதவீதமளவில் அரச நிறுவன கட்டமைப்பில் இடம்பெறுகிறது, இந்த வீண்விரயத்தை தடுத்து மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான திட்டத்தை மின்சார சபைக்கு சமர்ப்பித்தோம், ஆனால் மின்சார சபை அதனை உரிய நிறுவனங்கள் ஊடாக செயற்படுத்தவில்லை. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மின்சார கட்டணத்தை அதிகரித்தால் பல எதிர்விளைவுகளை எதிர்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இதன்போது கருத்துரைத்த நுகர்வோர் ஆலோசனை குழுவின் உறுப்பினர் நிஷாந்த பிரதிராஜ, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை புறக்கணித்து மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது. 0 முதல் 30 வரையான மின் அலகிற்கு தற்போது அறவிடப்படும் 360 ரூபா புதிய மின் கட்டண திருத்தத்தினால் 2000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

780 ரூபாவாக உள்ள 30 முதல் 60 வரையான மின்னலகுக்கான தற்போதைய கட்டணத்தை 3310 ரூபாவாகவும், 1800 ரூபாவாக உள்ள 60 முதல் 90 வரையான மின்னலகுக்காக தற்போதைய கட்டணத்தை 4860 ரூபாவாகவும், 5400 ரூபாவாக உள்ள 90 முதல் 120 வரையான மின்னலகுக்கான கட்டணத்தை 7920 ரூபாவாகவும் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment