சுமார் 30,000 பேர் ஓய்வு : அரச சேவையை நடத்திச் செல்வதில் தடங்கல் இல்லை : ஒரு சில ஊடகங்கள், நபர்களின் கருத்தில் உண்மை இல்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 31, 2022

சுமார் 30,000 பேர் ஓய்வு : அரச சேவையை நடத்திச் செல்வதில் தடங்கல் இல்லை : ஒரு சில ஊடகங்கள், நபர்களின் கருத்தில் உண்மை இல்லை

60 வயதாகும் அரச ஊழியர்களுக்கு டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு வழங்குகின்ற, 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய, நேற்றையதினம் (31) நாடு முழுவதும் உள்ள அரசாங்க நிறுவனங்களிலிருந்து சுமார் 30,000 பேர் ஓய்வு பெற்றனர். இதேவேளை, இவ்வாறு சுமார் 30,000 பேர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுவதன் காரணமாக, அரச சேவைக்கு எவ்வித தடங்கலும் ஏற்படாது என, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்கள் 30 ஆயிரம் பேர் ஓய்வு பெறச் செய்யப்படுவதனால், அரசாங்க சேவைகள் ஸ்தம்பிதமடையும் எனவும், அரசாங்க சேவையை நடாத்திச் செல்ல முடியாத நிலை ஏற்படுமெனவும், அரச சேவை நிலைகுலையும் எனவும் ஒரு சில நபர்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனவும், இது இதற்கு முன்னிருந்த வருடங்களில் இடம்பெற்று வந்தது போன்ற ஓய்வு பெறும் நடவடிக்கையே என்பதால் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 வரவு செலவுத் திட்டதில் ஓய்வு பெறும் வயதெல்லை 60 இலிருந்து 65 ஆக அதிகரிக்கப்பட்ட போதிலும் அதற்கு முன்னர் இருந்த வருடங்களில் அரச ஊழியர்கள் 60 வயதிலேயே ஓய்வு பெறச் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே குறிப்பிட்ட ஒரு வருடத்தின் ஒரு சில மாதங்கள் செயற்படுத்தப்பட்ட விடயத்தை அடிப்படையாகக் கொண்டு அரச சேவை வீழ்ந்து விடுமென எவரேனும் நம்புவார்களாயின் அவர்களுக்கு நாம் தெளிவூட்டுவது அவசியமாகுமென இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த குறிப்பிட்டார்.

இதேவேளை, டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுவோரின் சேவை தேவையாயின் ஒப்பந்த அடிப்படையில் இணைக்குமாறு, ஜனாதிபதி செயலகம் புகையிரத திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment