தீர்வின்றேல் பாண் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் : அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 31, 2022

தீர்வின்றேல் பாண் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் : அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

முட்டை தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், பாண் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தாவது முட்டைகளை இறக்குமதி செய்து, நிவாரண விலைக்கு விநியோகிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்தார்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் சனிக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டின் மொத்த முட்டை உற்பத்தியில் 50 சதவீதம் கூட தற்போது உற்பத்தி செய்யப்படுவதில்லை. உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும் 70 ரூபாவை அண்மித்துள்ளது. அதிக விலைக்கும் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாத நிலை பேக்கரி தொழிற்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

முட்டை தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிக்க நேரிடும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ள நிலையில் எவ்வாறு பேக்கரி உற்பத்தி தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்வது?

பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பேக்கரி உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதை தவிர்த்துள்ளார்கள்.

இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தாவது முட்டைகளை இறக்குமதி செய்து, பொதுமக்களுக்கு 30 ரூபாய்க்கு நிவாரண விலைக்கு வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

பிரச்சினைகளுடன் எம்மால் பேக்கரி உற்பத்தி சேவைத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றார்.

No comments:

Post a Comment