(எம்.மனோசித்ரா)
பாலூட்டும் தாய்மார், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் நிறை குறைவான குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவினை தடையின்றி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தென் ஆசிய கேட்வே டேர்மினல்ஸ் நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சுக்கிடையில் விசேட புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் குறித்த நிறுவனத்தினால் ஒரு வருட காலத்திற்கான திரிபோஷா உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் வழங்கப்படும். இது அந்த நிறுவனத்தின் நிவாரணமாக வழங்கப்படுவதோடு, இதற்காக 185 மில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென் ஆசிய கேட்வே டேர்மினல்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி ரொமேஷ் டேவிட், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
எடை குறைவான குழந்தைகளுக்காக திரிபோஷா வழங்கும் ஒரேயொரு நாடாக இலங்கை மாத்திரமே காணப்படுகிறது. கர்பிணிகள் , பாலூட்டும் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்காக மாதமொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் திரிபோஷா பக்கட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment