(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
மக்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழும் நிலையில் அரசாங்கம் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் மக்கள் எவ்வாறு வாழ்வது. மனசாட்சியுடன் செயற்பட்டு, உடனடியாக மின்சார கட்டண அதிகரிப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிபட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மின்சார கட்டணத்தை அதிகரிக்கப் போவதாக எமக்கு அறியக்கிடைத்திருக்கின்றது. அமைச்சரவையிலும் அதற்கு அனுமதி பெறப்பட்டிருக்கின்றது. மக்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்துவரும் நிலையில் மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் எவ்வாறு வாழ்வது?
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் அதன் நன்மையை மக்களுக்கு வழங்கும் வகையில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதில்லை. கொஞ்சமாவது மனசாட்சி என்பது இருக்க வேண்டும் அல்லாவா?
நாட்டில் பொருளாதார நெருக்கடி இருப்பதை நாங்கள் அறிகின்றோம். என்றாலும் மக்களுக்கு வாழ முடியா நிலையே இருக்கின்றது. என்ன செய்வது என தெரியாமல் இருக்கின்றனர். பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாேஷாக்கு இல்லை. மாணவர்கள் பாடசாலைகளில் மயங்கி விழுகின்றனர்.
பாடசாலை உபகரணங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதென்பது பாரிய பிரச்சினையாகும். கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்.
அத்துடன் மின்சார கட்டணம் ஏற்கனவே பாரியளவில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் பாராளுமன்ற பிரேரணையாக கருதி, மின்சார கட்டண அதிகரிப்பை உனடியாக நிறுத்தி, வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் அதிககூடிய தொகையை நாட்டின் பிள்ளைகளுக்கும் தாய்மாருக்கும் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment