பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி இன்று (30) அதிகாலை காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 100 என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் முதுமை காரணமான உடல்நலக் குறைவு தொடர்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அஹமதாபாத் யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை, ஆராய்ச்சி மையத்தில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை காலமானார்.
அஹமதாபாத் அருகே ரேசான் கிராமத்தில் உள்ள தனது தாயாரின் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, பிரதமர் மோடி அங்கு சென்று மாலையிட்டு, மரியாதை செய்தார்.
தொடர்ந்து, அவரது உடல் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்பட்டதோடு, வீட்டில் இருந்து வாகனத்தை நோக்கி தனது தாயாரின் உடலை பிரதமர் மோடி தோளில் சுமந்து சென்றார்.
ஹீராபென் மோடி பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் காந்திநகர் அருகே உள்ள ரேசான் கிராமத்தில் வசித்து வந்தார்.
நரேந்திர மோடி தனது பெரும்பாலான குஜராத் பயணங்களின் போது ரேசான் கிராமத்திற்கு சென்று தாயாரை அடிக்கடி சந்தித்து அவருடன் நேரத்தை செலவிடுவார்.
இதையடுத்து, வைத்தியசாலை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீரா பென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு என்ன பிரச்சினை என்பது குறித்தோ எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்தோ வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்படாத நிலையில் சற்றுமுன் அவர் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தாயின் மரணத்தை அடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது. என் தாயிடம், ஒரு துறவியின் பயணத்தையும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளத்தையும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையையும் உணர்ந்துள்ளேன்.
100 ஆவது பிறந்தநாளில் நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க. அதாவது, புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழ்க்கையை வாழுங்கள் என்பதே. இது எப்போதும் நினைவில் இருக்கிறது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஹீரா பென் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகரில் பிறந்தார். ஹீரா பென் பிறந்த சில நாட்களில் அவரது தாயார் அதாவது பிரதமர் மோடியின் தாய்வழி பாட்டி இறந்துவிட்டார். அது உலகம் முழுவதும் தொற்றுநோய் ஏற்பட்டிருந்த காலம்.
"என் அம்மாவின் குழந்தைப் பருவம் தாயின்றி கழிந்தது, அம்மாவைப் பார்க்க முடியவில்லை, மடியில் தலையைப் புதைத்துக் கொள்ள முடியவில்லை, அம்மாவுக்கு எழுத்து அறிவு கூட இல்லை, பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிக்கு.வீட்டின் கதவைக்கூட பார்க்கவில்லை. வீட்டில் எங்கும் ஏழ்மையை மட்டுமே பார்த்தார்” என்று தனது தாய் பற்றி மோடி அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஹீரா பென் மோடியின் வாழ்க்கைக் குறிப்பு
ஹீரா பென் மோடி, 1922ஆம் ஆண்டு குஜராத்தின் மெஹ்சானாவில் பிறந்தார். அவர் தேநீர் விற்பனையாளரான பிரதமர் மோடியின் தந்தை தாமோதர்தாஸ் முல்சந்த் மோடியை மணந்தார்.
2015ஆம் ஆண்டு ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் உடனான பிரபல பேட்டியில், பிரதமர் மோடி தனது தாயைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார்.
பிரதமர் மோடி தனது தாயை தனது வாழ்க்கையின் தூண் என்று வருணித்தார். 2016ஆம் ஆண்டு மே மாதம் ஹீரா பென் மோடி, டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நரேந்திர மோடியை சந்தித்தார்.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மகனும் நாட்டின் பிரதமருமான நரேந்திர மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு முடிவை ஹீரா பென் ஆதரித்து கருத்து வெளியிட்டார். அப்போது அவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பரவி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
இத்தனைக்கும் பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிற்பாடு ஹீரா பென்னும் ஏடிஎம் வாயிலில் வரிசையில் காத்திருந்த படங்கள் அப்போது வெளிவந்து வைரலாயின.
கடந்த ஆண்டு, கோவிட்-19 தடுப்பூசியை வயதானவர்கள் போட்டுக் கொள்வதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக வதந்தி பரவியபோது, ஹீரா பென் தடுப்பூசி போட்டுக் கொண்ட காட்சிகள் வெளி வந்தபோதும் அவரது செயல்பாடு பரவலான கவனத்தை ஈர்த்தது.
No comments:
Post a Comment