கால்பந்தாட்ட மன்னர் பீலே காலமானார் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 29, 2022

கால்பந்தாட்ட மன்னர் பீலே காலமானார்

கால்பந்து மன்னர் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பேலே/பீலே (Pele) தனது 82ஆவது வயதில் நேற்று (29) காலமானார்.

21 வருட கால்பந்தாட்ட அனுபவத்தை கொண்ட பேலேயின் மறைவையிட்டு பிரேஸிலில் அந்நாட்டு அரசாங்கத்தினால் 3 நாட்கள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக புற்றுநோயினால் அவதியுற்று பிரேஸிலின் சாவோ போலோ நகரிலுள்ள அல்பர்ட் ஐன்ஸ்டீன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (29) காலமாகியுள்ளார்.

கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பீலே கருதப்படுகிறார்.

1950 களின் இறுதியில் தொடங்கி 21 ஆண்டுகள் கால்பந்து ஆடிய பீலே 1363 போட்டிகளில் ஆடி 1,281 கோல்களை அடித்திருக்கிறார். இவற்றில் தனது நாட்டுக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 92 கோல்களும் அடங்கும்.

கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பை வென்ற அணியில் 3 முறை இடம்பெற்ற ஒரே வீரர் இவர் மட்டும்தான். 1958, 1962, 1970 என மூன்று முறை பிரேசில் அணி உலகக் கோப்பையை வென்றபோதும் அவர் அணியில் இருந்தார்.

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரர் என்று 2000 ஆவது ஆண்டில் பீலேயை ஃபிஃபா தேர்வு செய்தது.

2020ஆம் ஆண்டில் பிபிசி நடத்திய ஒரு வாக்கெடுப்பில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, மாரடோனா ஆகியோரைவிட உலகின் மிகச் சிறந்த வீரர் என்று பீலே தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த சில காலமாக சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகளால் அவர் அவதிப்பட்டு வந்தார்.

2021ஆம் ஆண்டு அவருக்கு மலக்குடலில் இருந்த புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது. எனினும் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த நவம்பரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

"பல உறுப்புகளின் செயலிழப்பு காரணமாக, அவரது முந்தைய மருத்துவ சிக்கல்களுடன் தொடர்புடைய பெருங்குடல் புற்றுநோய் வளர்ச்சியின் விளைவாக" இறந்துவிட்டதாக மருத்துவமனை கூறியுள்ளது.

"உத்வேகத்தாலும் அன்பாலும் நினைவு கூரப்படும் பீலே, இன்று அமைதியாக மரணமடைந்தார். அன்பும் அன்பு, அன்பு, அன்பு, என்றென்றும்." என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

"எல்லா காலத்திலும் சிறந்த விளையாட்டு வீரர் என்பதைவிட பீலே சிறப்பானவர்” என்று பிரேசில் கால்பந்து சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

"எங்கள் கால்பந்து மன்னர் வெற்றி பெற்ற பிரேசிலின் மிகச்சிறந்த தலைவராக இருந்தார். கடினமான தருணங்களிலும் அவர் அஞ்சவில்லை. தன் தந்தைக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தருவதாக வாக்களித்தார். அதை மூன்று முறை பரிசளித்தார்.”

"எங்கள் மன்னர் எங்களுக்கு ஒரு புதிய பிரேசிலைக் கொடுத்தார், அவருடைய பாரம்பரியத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நன்றி, பீலே."

பீலேவின் இறுதிச் சடங்கு விவரங்களை அவரது முன்னாள் கிளப்பான சான்டோஸ் வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை காலை, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து கிளப்பின் மைதானத்துக்கு கொண்டு செல்லப்படும், அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைதானத்தின் மையத்தில் வைக்கப்படும்.

செவ்வாயன்று, சாவ் பாலோவில் உள்ள சாண்டோஸ் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்படும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீலேயின் ( 82) உடல் நிலை குறித்து அவரது மகள் கெலி நஸ்சிமென்டோ ரசிகர்களிற்கு தொடர்ச்சியாக தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் பீலேயின் உடலில் அவரது குடும்பத்தினரின் கரங்கள் காணப்படும் படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment