கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்கு தப்பியோட்டம் ! - News View

About Us

About Us

Breaking

Saturday, December 31, 2022

கஞ்சிப்பானை இம்ரான் இந்தியாவிற்கு தப்பியோட்டம் !

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான 'கஞ்சிப்பானை இம்ரான்', இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல இந்திய ஊடகமான 'தி இந்து' செய்தி நிறுவனம் பொலிஸ் தகவலின் அடிப்படையில் இதனை தெரிவித்துள்ளது.

போதைப் பொருள், கொலைகள் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 'கஞ்சிப்பானை இம்ரான்' என அழைக்கப்படும், மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான், 2019 இல் துபாயில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் பங்குபற்றிய விருந்துபசாரம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வந்த கஞ்சிப்பானை இம்ரான், கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி தலா ரூ. 5 மில்லியன் கொண்ட இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2022 டிசம்பர் 25 ஆம் திகதி ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையோர பகுதியில் வந்திறங்கிய அவரையும் அவரது கூட்டாளியையும் தேடுமாறு தமிழக உளவுத்துறை, மாநிலம் முழுவதும் உள்ள உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக இந்து தெரிவித்துள்ளது.

பிணையில் வந்த பிறகு இம்ரான் இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து இந்திய மாநில உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிணையில் வந்த இம்ரான் மாறுவேடத்தில் தலைமன்னாருக்குச் சென்றதாகவும், அங்கிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கான ஏற்பாடுகளை அவரது கூட்டாளிகள் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்திருந்ததாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் இதுவரை இலங்கை பொலிசார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் கஞ்சிப்பானை இம்ரான் தொடர்பான எவ்வித தகவல்களையும் உடனடியாக வெளியிடவில்லை என்பதை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment