கல்விக்கான பிராந்திய வலயமாக இலங்கையை உருவாக்க வேண்டும், 21 - 22 வயதில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற வேண்டும் : ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, December 1, 2022

கல்விக்கான பிராந்திய வலயமாக இலங்கையை உருவாக்க வேண்டும், 21 - 22 வயதில் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற வேண்டும் : ஜனாதிபதி

எமது நாட்டு மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக வருடாந்தம் மூன்று பில்லியன் டொலர் நிதி செலவாகின்றது. உரிய முறையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் இந்த மூன்று பில்லியன் டொலர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்து, மேலும் 10 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சு, மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 1946ஆம் ஆண்டு இலவசக் கல்வி நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்காலத்தில் இருந்ததைப்போல் தொடர்ந்தும் பாடசாலைகளை கொண்டு நடத்த முடியாது. கல்வித்துறையில் மாற்றங்கள் அவசியம்.

அக்காலத்தில் இயங்கிய பாடசாலைகள் வேண்டுமா? அல்லது 80ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்ததைப்போல் பாடசாலைகள் வேண்டுமா? என்பதைப் பற்றி சிந்திக்காது 2023 ஆம் ஆண்டில் இருந்து 25 ஆண்டுகள் முன்நோக்கிப் பயணிக்கக் கூடிய பாடசாலைகளே எமக்குத் தேவை என்பதை சிந்தித்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டில் பாரிய பல்கலைக்கழகங்கள் காணப்படாவிட்டாலும் கல்விக்கான பிராந்திய வலயமாக இலங்கையை உருவாக்க முடியும். அதற்கான வழிவகைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

எமது மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வியைப் பெற்றுக் கொள்ள பல பில்லியன் டொலர்கள் செலவாகின்றன. ஆகக் குறைந்தது 3 பில்லியன் டொலர்கள் எமது நிதி வெளிநாடுகளுக்கு செல்கின்றன. இந்த மூன்று பில்லியன் டொலர்களையும் நாட்டில் மீதப்படுத்த முடியும்.

அதற்கு மேலதிகமாக நாம் உரிய முறையில் சிறந்த வேலைத்திட்டங்களுடன் செயல்பட்டால் மேலும் 10 பில்லியன் டொலர்களை உள்ளீர்த்துக் கொள்ளவும் முடியும்.

இவ்வாறான முயற்சிகளை நாம் மேற்கொள்ளும்போது என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

இளைஞர்கள் 21 - 22 வயதில் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற வேண்டும். அப்படியிருந்தால்தான் அவர்களுக்கு தொழிலுக்கு செல்ல முடியும். தொழில்சந்தைக்குத் தேவையான வகையில் இவற்றை நாம் முறையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அவ்வாறில்லாவிட்டால் வேலை வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போகும். இந்த விடயத்தில் தேசிய சபையும் பாராளுமன்றத்தில் உள்ள ஏனைய குழுக்களும் கவனம் செலுத்த வேண்டும்.

இதனை அரசாங்கம் தனியாக மேற்கொள்ளும் போது எதிர்க்கட்சியினர் அதற்கு எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக வீதிகளில் இறங்குவதா ? அல்லது பாராளுமன்றம் என்ற வகையில் நாம் அனைவரும் இணைந்து இவ்வாறான வேலைத்திட்டங்களை சாத்தியமாக முன்னெடுப்பதா என்பது தொடர்பில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

நாட்டையும் சமூகத்தையும் கட்டியெழுப்ப முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மேற்கொள்ளப்படும் சில தீர்மானங்கள் பிரபலமானதாக இல்லாவிட்டாலும் அதற்கான வலுவான பணிகளை முன்னெடுப்பதற்கான பலம் பாராளுமன்றத்திற்கு இருக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment