(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என சட்ட ஆய்வு கவுன்சில் எடுத்துள்ள தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை. சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டுமாயின் அவர்களுக்கு பகுதியளவு நிதியுதவி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆங்கிலம் கற்பதில் தவறேதும் உள்ளதா என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (1) 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் குறிப்பிட்டதாவது, சட்டக் கல்லூரி மாணவர்கள் இனி ஆங்கில மொழியில் மாத்திரம்தான் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்ற தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்ன.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்ட ஆய்வு கவுன்சில்தான் அந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இது அரசாங்கத்தின் நிறுவனமல்ல, சட்டமா அதிபர், பிரதம நீதியரசர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ளார்கள். ஆகவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை.
சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டுமாயின் அதற்கான சூழல் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஆங்கில பாடநெறிக்கான கட்டணத்தை பகுதியளவில் செலுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தலாம், ஆங்கில மொழி கற்பதில் ஏதேனும் தவறு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
No comments:
Post a Comment