அடுத்த ஆண்டு மார்ச்சில் பாரதூரமான மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் : எச்சரிக்கும் உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Thursday, December 1, 2022

அடுத்த ஆண்டு மார்ச்சில் பாரதூரமான மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் : எச்சரிக்கும் உதய கம்மன்பில

(எம்.மனோசித்ரா)

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, நீர் மற்றும் அனல்மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மின் உற்பத்தியில் பாரிய தாக்கத்தினை செலுத்தும். எனவே தற்போது உரிய திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படாவிட்டால், அடுத்த ஆண்டு மார்ச்சில் பாரதூரமான மின்சார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஜனவரி 21 ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து அதில், இம்மாதத்திலிருந்து நாளாந்தம் ஒரு மணித்தியாலம் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாவிட்டால் மார்ச் இடைப்பகுதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நாம் எச்சரித்திருந்தோம்.

துரதிஷ்டவசமாக எமது எச்சரிக்கை உண்மையாகும் வகையில் மார்ச் மாதத்தின் இறுதி பகுதியில் நாளொன்றில் 14 மணித்தியாலங்கள் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வீதிக்கு இறங்கினர். இறுதியில் இவற்றினால் ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக நேரிட்டது. அன்று நாம் கூறியவற்றை அரசாங்கம் செவிமடுத்திருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

அடுத்த மாதம் ஈரவலயத்தில் வறண்ட காலநிலை ஆரம்பமாகவுள்ளது. எனினும் இன்றைய நிலைமை அன்றையதை விட பாரதூரமானதாகவுள்ளது. முழு மின் உற்பத்தியில் 35 சதவீதம் அதாவது 810 மெகாவோல்ட் மின்சாரம் நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும் தம்மிடமுள்ள நிலக்கரியின் அளவு இரு மாதங்களுக்குக்கூட போதுமானதல்ல என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மறுபுறம் தற்போது ஐரோப்பாவில் குளிர் காலம் ஆரம்பமாகியுள்ளது. எனவே அங்கு வெப்பத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதால், எரிபொருள் பாவனை வீதமும் அதிகரிக்கும். இதனால் உலக சந்தையில் டிசம்பர், ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் எரிபொருள் விலை கணிசமானளவு அதிகரிக்கும். இவ்வாறு எரிபொருள் விலை உயர்வடைந்தால் எம்மிடம் அதனை இறக்குமதி செய்வதற்கான டொலர் இன்மையால் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

நீர்த் தேக்கங்களில் நீர் இன்மையால் நீர் மின் உற்பத்தியும் சாத்தியமற்றதாகும். எரிபொருள் விலை அதிகரிப்பு, நிலக்கரி இறக்குமதி செய்யப்படாமை என அனைத்து காரணிகளும் மின் உற்பத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்தும். எனவே இவ்வாண்டு மார்ச் மாதத்தை விட, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பாரிய மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

எனவே ஆணவத்துடன் செயற்படாமல், விடயம் தெரிந்தவர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி செயற்படுமாறு அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களை வலியுறுத்துகின்றோம். அதற்கமைய தற்போதிலிருந்தே உரிய திட்டமிடலையும் தயார்ப்படுத்தல்களையும் மேற்கொள்ளுமாறு கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment