தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம் - News View

About Us

Add+Banner

Breaking

  

Tuesday, November 29, 2022

demo-image

தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்

2-SDIG-Deshabandu-Tennakoon
(எம்.எப்.எம்.பஸீர்)

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை மையப்படுத்தி, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேகநபராக பெயரிட்டு, அவரை கைது செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கட்டளை நீதிப் பேராணை மனுவை எதிர்வரும் 16ஆம் திகதி பரிசீலிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (29) தீர்மானித்தது.

மக்கள் போராட்டத்துக்கு ஆதரவான சட்டத்தரணி ராமலிங்கம் ரஞ்சன் அரசியலமைப்பின் 140ஆவது உறுப்புரை பிரகாரம் தாக்கல் செய்த இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது. இதன்போதே எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை மனு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று இம்மனு ஆராயப்பட்டபோது, மனுதாரர் சார்பில் மன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆஜராகி மன்றில் விளக்கங்களை முன்வைத்தார். அதன்படி குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கின் அடிப்படையான பொலிஸ் விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் விசாரணைகளில் போதுமானளவு சான்றுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதும், இந்த கட்டளை நீதிப் பேராணை மனுவின் பிரதிவாதியான தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பொலிஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டார்.

இதன்போது பிரதிவாதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுதத் கல்தேரா, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது சேவை பெறுநருக்காக இவ்வழக்கில் ஆஜராகவுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் நேற்றே கிடைக்கப் பெற்றதால், விடயங்களை முன்வைக்க கால அவகாசம் வேண்டும் எனவும் கோரினார்.

இரு தரப்பு விளக்கங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை எதிர்வரும் 16ஆம் திகதி பரிசீலிப்பதாக அறிவித்தது.

அதன்படி இந்த மனு தொடர்பில் வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகள் இருப்பின் அடுத்த நீதிமன்ற திகதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவற்றை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் மனுவின் தரப்பினருக்கு அறிவித்தது.

இந்த மனுவில் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த மே 9ஆம் திகதி காலி முகத்திடல் - கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேகநபராகக் பெயரிடுவதற்கு போதுமான சான்றுகள் இருப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றமும் அவதானித்துள்ளதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இருந்த போதிலும், தேசபந்து தென்னகோனை சந்தேகநபராகப் பெயரிட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு இதுவரை பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கோட்டா கோ கம மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கில் தேசபந்து தென்னகோனை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை பிறப்பிக்குமாறு மனுதாரர் நீதிமன்றை கோரியுள்ளார்.

மேலும், தேசபந்து தென்னகோனை கைது செய்து தடுத்து வைத்து மேலதிக வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் இது தொடர்பான மனுவில் மனுதாரர் கோரியுள்ளார்.

விசாரணைகள் முடியும் வரை, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *