தெற்கு காசாவில் அமெரிக்க ஆதரவு உதவி விநியோக நிலையம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற புதிய வன்முறை சம்பவத்தில் மேலும் 21 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பெரும்பாலானவர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கான் யூனிஸ் நகரில் உள்ள தளத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற சம்பவத்தில் ஆயுதம் ஏந்திய எதிர்ப்பாளர்கள் மீது இந்த உதவி விநியோகத்தை முன்னெடுக்கும் அமெரிக்க – இஸ்ரேல் ஆதரவான காசா மனிதாபிமான அமைப்பு குற்றம்சாட்டியபோது காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல் அதற்கு முரணாக உள்ளது.
இதில் குழப்பத்திற்கு மத்தியில் 19 பேர் நெரிசலில் சிக்கியும் மற்றவர்கள் கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்பட்டதாக சர்ச்சைக்குரிய காசா மனிதாபிமான அமைப்பு முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கூட்டத்தில் இருந்து ஹமாஸுடன் தொடர்புபட்ட ஆயுதம் ஏந்தியவர்களே இந்த நெரிசலைத் தூண்டியதாக அந்த அமைப்பின் அறிவிப்பில் குறிப்பிட்டபோதும் அது பற்றி எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. தமது அமைப்பின் பணியாளர்கள் கூட்டத்திற்குள் ஆயுதம் ஏந்திய பலரைக் கண்டதாகவும் தமது அமெரிக்க ஒப்பந்ததாரர்களில் ஒருவர் துப்பாக்கியால் அச்சுறுத்தப்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த சம்பவம் குறித்து காசா மனிதாபிமான அமைப்பு வெளியிட்ட கூற்றுக்கு முற்றிலும் முரணான தகவலை பலஸ்தீன நிர்வாகம் மற்றும் சம்பவத்தைப் பார்த்தவர்கள் வெளியிட்டுள்ளனர்.
காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், காசா மனிதாபிமான அமைப்பின் தளத்தில் 21 பலஸ்தீனர்கள் புதன்கிழமை கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. உதவி நாடி வந்த கூட்டத்தினர் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டதால் இவர்களில் 15 பேர் நெரிசலில் சிக்கியும் மூச்சுத் திணறியும் உயிரிழந்ததாக அது சுட்டிக்காட்டியுள்ளது.
‘உதவி விநியோக நிலையங்களில் முதல் முறையாக மூச்சுத் திணறல் மற்றும் நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன’ என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கூட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை பிரயோக மேற்கொண்டதை சம்பவத்தைப் பார்த்தவர்கள் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு உறுதி செய்துள்ளனர்.
இதேவேளை நாசர் மருத்துவமனையின் மருத்துவ வட்டாரம் ஒன்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில், பட்டினியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் உணவை பெறுவதற்கு முயன்றபோது உதவி விநியோக நிலையத்தின் பிரதான வாயில் மூடப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மற்றும் நிலையத்தின் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் அவர்கள் மீது சூடு நடத்தியதால் பெரும் எண்ணிக்கையானவர்கள் உயிரிழந்து மற்றும் காயமடைந்தனர்’ என்று பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
காசாவில் கடந்த மே கடைசியில் காசா மனிதாபிமான அமைப்பு உதவி விநியோகத்தை ஆரம்பித்தது தொடக்கம் உணவைப் பெறும் முயற்சியில் குறைந்தது 875 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பதாக ஐ.நா மனித உரிமை அலுவலக பேச்சாளர் ரவினா ஷம்தசானி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.
இஸ்ரேலிய இராணுவம் மற்றும் காசா மனிதாபிமான அமைப்பின் ஒப்பந்ததாரர்கள் இந்தக் கொலைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
காசா மனிதாபிமான அமைப்பின் உதவி விநியோக நிலையங்கள் ‘மரணப் பொறிகள்’ என ஐ.நா விபரித்துள்ளது. அவை பாதுகாப்பற்றவை என்றும் மனிதாபிமான பாரபட்சமின்மை தொடர்பான தரநிலைகளை மீறுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
பலஸ்தீன தன்னார்வ தொண்டு அமைப்புகளின் வலையமைப்பின் பணிப்பாளர் அம்ஜாத் ஷவா, காசா மனிதாபிமான அமைப்பு தவறாக நிர்வாகத்தை மேற்கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
‘பட்டினி மற்றும் களைப்புடன் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே (உதவி விநியோக இடங்கள்) ஒன்றுகூடும் நிலையில் அவர்கள் உதவிகளின் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் குறுகலான இடத்தில் ஒடுக்கப்படுகின்றனர்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் அல் மவாசியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மத்தியிலேயே உதவி விநியோக நிலையத்திலும் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோன்று மத்திய காசாவின் நுஸைரத் அகதி முகாமில் உள்ள கூடாரம் ஒன்றின் மீது இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 94 பேர் கொல்லப்பட்டு மேலும் 252 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று (16) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2023 ஒக்டோபரில் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 58,573 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 139,607 பேர் காயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment