இம்ரான் கான் பயணித்த பேரணி வாகனம் : பெண் ஊடகவியலாளர் தலை நசுங்கி பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 1, 2022

இம்ரான் கான் பயணித்த பேரணி வாகனம் : பெண் ஊடகவியலாளர் தலை நசுங்கி பலி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பேரணியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளரான பெண்ணொருவர், கனரக வாகனமொன்றினால் தலை நசுங்கி உயிரிழந்துள்ளார்.

சதாஃப் நயீம் எனும் 40 வயதான ஊடகவிலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குஜ்ரன்வாலா மாவட்டத்தின் சதோக் நகரில் ஞாயிற்றுக்கிழமை (30) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பி.ரி.ஐ. கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் இம்ரான் கான், லாகூர் நகரிலிருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி நீண்ட அணிவகுப்பு எனும் பேரணியை நடத்தி வருகிறார்.

இப்பேரணியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செனல் 5 எனும் தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான சதாஃப் நயீம், இம்ரான் கான் பயணித்த கொள்கலன் வாகனத்தில் நசுங்கி உயிரிழந்தார்.

இம்ரான் கானின் குரல் பதிவொன்றை பெறுவதற்காக கொள்கலன் வாகனத்தில் ஊடகவியலாளர் சதாஃப் நயீம் ஏற முயன்ற நிலையில், தவறி வீழ்ந்தார் எனவும், அதன்பின் அவரின் தலை மீது வாகனத்தின் சக்கரம் ஏறியதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொலைக்காட்சியின் மூலம் இத்தகவலை தனது குடும்பத்தினர் அறிந்துகொண்டதாக சதாஃபின் கணவர் நயீம் தெரிவித்துள்ளார். இத்தம்பதிக்கு 21 வயதான மகளும் 15 வயதான மகளும் உள்ளனர்.

இம்சம்பவத்தின் பின்னர், அன்றைய தின பேரணியை இம்ரான் கான் நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் சதாஃப் நயீமின் மரணம் தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு இம்ரான் கான் அனுபதாபம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் சதாப்ஃ நயீமின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் அவரின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் பாகிஸ்தான் ரூபா (சுமார் 83 லட்சம் இலங்கை ரூபா) நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதேவேளை பஞ்சாப் மாகாண முதலைமைச்சர் சௌத்திரி பர்வேஸ் எலாஹியும் சதாஃப் நயீமின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்துள்ளதுடன், அவரின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் மாகாண அரசாங்கமும் 50 லட்சம் பாகிஸ்தான் ரூபா நிதியுதவி வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment