கொள்வனவு அதிகரிப்பின் மூலம் பெரிய வெங்காய விலையில் நிவாரணம் - விசேட வர்த்தக பொருள் வரியை குறைக்க ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Sunday, November 27, 2022

கொள்வனவு அதிகரிப்பின் மூலம் பெரிய வெங்காய விலையில் நிவாரணம் - விசேட வர்த்தக பொருள் வரியை குறைக்க ஆலோசனை

விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி விகிதத்தை குறைக்குமாறு, உணவு கொள்கைகள் குழு கடந்த 24ஆம் திகதி கூடிய போது பரிந்துரை செய்திருந்தது.

அதற்கமைய, சந்தையில் பெரிய வெங்காய கொள்வனவின் அதிகரிப்பின் மூலம், அதன் விலை குறைவடைவதற்கு காரணமாக அமையுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெங்காயத்துக்கான மொத்த தேவை வருடத்திற்கு சுமார் 300,000 மெட்ரிக் தொன்னாகும். அத்தேவையானது முக்கியமாக (86%) இறக்குமதி மூலமே நிறைவேற்றப்படுகின்றது. அதன்படி வெங்காயத்தின் தன்னிறைவு விகிதம் ஒரு ஆண்டுக்கான தேவையில் 14% வீதமாகும்.

நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரம் அளவில் இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோ கிராம் சில்லறை விலை ரூ. 290- 390 ஆகும். அதே வேளை உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோ கிராம் ரூ. 340 - 400 ஆக காணப்பட்டது.

நவம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் ஒரு கிலோ கிராம் சராசரி விலை (CIF விகிதம்) ரூ. 95.30 ஆக காணப்பட்டதோடு 2022 ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் அதன் விலைக்கு இணைந்ததாக சாதாரண அதிகரிப்பை மாத்திரமே அது காட்டியது.

2022 வருடம் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்துக்கு குறிப்பிட்ட விசேட வர்த்தகப் பொருட்களுக்கான வரியை ரூ. 10 தொடக்கம் 50 ரூபா வரை அரசாங்கம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து பெரிய வெங்காய இறக்குமதி பெருமளவு குறைந்தது.

ஓகஸ்ட் மாதத்தில் 27,889 மெட்ரிக் தொன்னாக காணப்பட்ட இறக்குமதி, நவம்பர் மாதம் (மூன்றாவது வாரமளவில்) 13,496 மெட்ரிக் தொன்னாக அது வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சியினால் ஓகஸ்ட் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் ரூ. 175 இலிருந்து ரூ. 328 வரை அதிகரிப்படைய காரணமாக அமைந்தது.

எவ்வாறாயினும் நவம்பர் 22 ஆம் திகதியிலிருந்து ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 250 ரூபாய் வரை வீழ்ச்சியை காட்டியுள்ள போதும், விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி விகிதம் அதிகரிப்பதற்கான காலப்பகுதிக்கு இணைந்ததாக அதன் விலையிலும் அதிகரிப்பைக் காணமுடிகின்றது.

ஓகஸ்ட் மாதத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் CIF விகிதம் மிகக் குறைந்தளவே அதிகரித்துள்ளபோதும் இத்திடீர் விலையேற்றத்துக்கு காரணம் செப்டெம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட வர்த்தக பொருள்களுக்கான வரி விகித அதிகரிப்பேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment