ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் உலக சிறுவர் தின கொண்டாட்டம் : சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு முக்கிய காரணம் கையடக்கத் தொலைபேசிகளே - News View

About Us

About Us

Breaking

Saturday, October 1, 2022

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் உலக சிறுவர் தின கொண்டாட்டம் : சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு முக்கிய காரணம் கையடக்கத் தொலைபேசிகளே

இன்று உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலமும், வாழைச்சேனை பொலிஸ் நிலையமும் இணைந்து சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் உலக சிறுவர் தினத்தை பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் முதல்வர் ஏ.எல்.எம். அபுல்ஹசன் தலைமையில் மிகச் சிறப்பாக கொண்டாடியது.

இச்சிறுவர் தின நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி ஈ.எல். பதுறுதீன் உரையாற்றுகையில், பாடசாலையில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு முக்கிய காரணமாக அமைவது இன்றைய சூழலில் காணப்படும் கையடக்க தொலைபேசியாகும்.

இக்கையடக்கத் தொலைபேசியானது பாரிய சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்று வருவதற்கு வழிகோலாக அமைகின்றது என்றும் அது மாணவர்களின் உடல் நலத்திற்கும் கேடனாது என்றும் தெரவித்தார்.

அண்மையில் எமது நாட்டிற்குள் இடம்பெற்ற சிறுவர் துஸ்பிரயோகம் ஒன்றுக்கான மூல காரணம் போதைப் பொருள் பாவனை என்பதனை வாழைச்சேனை பொலிஸ் நிலைய சமூக தொடர்பாடல் சுற்றாடல் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி பண்டார மாணவிகளுக்கு தெளிவூட்டினார்.

கையடக்க தொலைபேசியிலுள்ள உள்ள விடயங்களை வீட்டிலுள்ளவர்கள் அறியாமல் எவ்வாறு திருடி அவர்களின் அந்தரங்க விடயங்களை பெற்று மாணவர்களை பயமுறுத்தி பாலியல் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றது என்பதனையும் கையடக்க தொலைபேசிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஏ.எம் தாஸிம் கருத்து தெரிவித்தார்.

இன்றைய சிறுவர் நிகழ்வில் மாணவிகளுக்கிடையிலான சிநேகபூர்வமான விளையாட்டுகளான சங்கீத கதிரை, கரம் விளையாடுதல், கிரிக்கட் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றது.

அதன் பின்னர் வருகை தந்த அதிதிகள் மற்றும் மாணவிகளால் சிறுவர் தினம் தொடர்பான மனப்பதிவுகளை சுவரில் ஒட்டப்பட்ட கடதாசியில் பதிவிட்டு சென்ற சம்பவமும் அதில் மாணவிகளின் பதிவுகள் அங்கு வருகை தந்த அதிதிகளை மிகவும் மகிழ்ச்சிக்குட்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி நிருபர் அ.ச.மு. சதீக்

No comments:

Post a Comment