ஆபிரிக்காவின் கெம்பியா பகுதியில் சிறுவர்கள் பலர் உயிரிழந்துள்ள சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்திய நிறுவனத்தின் மருந்து இலங்கையில் இறக்குமதி செய்யப்படுவதில்லை என்று சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த மருந்து வகையினை எதிர்வரும் காலங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதி செய்யாமலிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டுக்குள் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முறையான ஒழுங்குபடுத்தும் முகவர் நிலையங்கள் உள்ளன.
அதற்கமைய, குறித்த சர்ச்சைக்குரிய மருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பது சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மருந்துகளை பதிவு செய்யும் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, நாட்டிற்கு மருந்துகளை இறக்குமதி செய்யும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், மருந்துகளை விநியோகிக்கும் மருந்து வழங்கல் பிரிவு என்பன இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக எமக்கு கிடைக்கப் பெற்ற நன்கொடைகளை ஆராய்ந்த பின்னர் கடந்த காலங்களில் பெறப்பட்ட மருந்துகளில், மேற்குறிப்பிட்ட மருந்துகள் உள்ளடங்கவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் அபாய அறிவித்தல்களை விடுத்துள்ளது. எனவே இலங்கை தொடர்ந்தும் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படும். எவ்வாறிருப்பினும் மக்கள் தற்போது இது தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரழப்புடன் தொடர்புபட்டதாக உலக சுகாதார அமைப்பு சந்தேகம் வெளியிட்ட நான்கு இருமல் மருந்துகள் தொடர்பில் சர்வதேச எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சிரப் மருந்துகள் கடுமையாக சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுவர்களிடையே 66 உயிரிழப்புகளுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் இந்திய நிறுவனம் ஒன்றான மெய்டென் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க தவறி இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது பற்றி அந்த மருந்து உற்பத்தி நிறுவனம் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
பாதிப்புக்குக் காரணம் என சந்தேகிக்கப்படும் Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup ஆகிய மருந்துகளை உலக சுகாதார அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.
No comments:
Post a Comment