கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரங்களில் குறையும் : வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Monday, October 3, 2022

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரங்களில் குறையும் : வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்த நூறு கொள்கலன்களில் கோதுமை மா துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் இரண்டு வாரங்களுக்குள் அதனை தட்டுப்பாடின்றி 250 ரூபா என்ற குறைந்த விலையில் சந்தைக்குப் பெற்றுக் கொடுக்க முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (3) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ரோஹண பண்டார எம்.பி. தெரிவிக்கையில், சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 50 கிலா மூடை எடுப்பதற்கு இல்லை. ஆனால் கிலாே அடிப்படையில் பொதி செய்து 450 ரூபாவுக்கு கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. எந்த கட்டுப்பாடும் இல்லை. அதனால் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா என்றார்.

இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், கோதுமை மாவுக்கு நெருக்கடி காணப்படுகிறது. அதற்குக் காரணம் தேசிய ரீதியில் இரண்டு நிறுவனங்கள் மாத்திரமே 99 வீதமான கோதுமை மாவை உற்பத்தி செய்கின்றன.

அதேவேளை, இந்தியாவிலிருந்தே நூற்றுக்கு 90 வீதமான கோதுமை மா நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. எனினும் தற்போது இந்திய அரசாங்கம் கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதால், நாம் துபாய் மற்றும் துருக்கி நாடுகளில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக சில காலம் எடுத்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமை மா நூறு கொள்கலன்கள் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தற்போது அதனை தரை இறக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் குறைந்த விலையில் அதனை சந்தைக்கு வழங்குவதற்கு முடியும்.

எவ்வாறெனினும் பொதி செய்து அதிக விலையில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவது தொடர்பில் வர்த்தக அமைச்சினால் எதுவும் செய்ய முடியாது. கோதுமை மாவுக்கு கட்டுப்பாடு விலையும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment